ஆத்துார் : கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் அமைச்சர் உதயநிதி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கெங்கவல்லி கூட்டத்துக்கு, தலைவாசல் அருகே காமக்காபாளையத்தை சேர்ந்தவர்கள், 25 பேர் வீதம், இரண்டு மினி சரக்கு ஆட்டோக்கள், 27 பேருடன் மற்றொரு மினி சரக்கு ஆட்டோ என, மூன்று ஆட்டோக்களில் காமக்காபாளையத்தில் இருந்து நாவலுார் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.இதில், 27 பேருடன் சென்ற மினி சரக்கு ஆட்டோவை, டிரைவர் ராஜதுரை, 48, ஓட்டினார். மாலை, 4:00 மணிக்கு நாவலுார் ஏரிக்கரை வளைவில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ கரையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணித்த அனைவரும் காயமடைந்ததால், '108' அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைத்து, 27 பேரையும், தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதில், 23 பேர் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தி.மு.க., ஒன்றிய இளைஞர்அணி பிரதிநிதி தயாநிதி, 29, தி.மு.க., உறுப்பினரும், கூலி தொழிலாளியுமான செல்லதுரை, 50, ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.