| ADDED : மே 16, 2024 01:31 AM
மதுரை:கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படும் வகையில், மாணவர்கள் உள்ளிட்டோரின் அனைத்து தகவல்களும், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எமிஸ் தளத்தின் தகவல்கள் சில தனியாருக்கு கைமாறுகிறது என்ற குற்றச்சாட்டுகள், அவ்வப்போது எழுந்து வருகிறது. இருப்பினும் தகவல்கள் பதிவேற்றம் தொடர்கிறது.தற்போது, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின், 1.16 கோடி அலைபேசி எண்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக கோடை விடுமுறையிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.எண்கள் சரிபார்ப்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட பெற்றோர் எண்ணிற்கு செல்லும், ஓ.டி.பி., எண்ணை கேட்டு, எமிசில் பதியும் வகையில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெற்றோரை அழைக்கும் ஆசிரியர்கள், ஓ.டி.பி., எண்ணை கேட்டால், அதை தெரிவிக்க பெற்றோர் மறுக்கின்றனர்.'சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தப்பிக்க ஓ.டி.பி., எண்களை தெரிவிக்காதீர்கள்' என வங்கிகள் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பி வரும் நிலையில், 'ஓ.டி.பி., ஏன் கேட்கிறீர்கள். நீங்கள் யார். போலீசில் புகார் செய்துவிடுவேன்' என கூறி, அழைப்பை பெற்றோர் துண்டித்துவிடுவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். விடுமுறையிலும் இதுபோல் தேவையில்லாத பணிகளை ஆசிரியர்களிடம் திணித்து, மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலர் ரங்கராஜன் கூறியதாவது:கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்து, கற்பித்தல் திறனை மேம்படுத்தி, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க செலவிடுகின்றனர். அதை தடுக்கும் வகையில் எமிஸ் பணிகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் புரட்சிக்கு முயற்சியுங்கள்@இப்பணி குறித்து குரல்பதிவு வாயிலாக கல்வி செயலர் குமரகுருபரன் கூறியதாவது:இப்பணி சவாலானது தான். ஆனால், கல்லுாரி கனவு உள்ளிட்ட திட்டங்களுக்காக சரியான டேட்டாவை மாவட்டம் வாரியாக வழங்க வேண்டும். மாவட்டம், ஒன்றியம் வாரியாக எளிதில் மேற்கொள்ளலாம்.சோதனை அடிப்படையில் திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த பணியில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இத்துறையில் பின்பற்றப்பட உள்ள 'வாட்ஸ் ஆப் கேட்வே' திட்டத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.இதன் வாயிலாக ஒரே நேரத்தில் 2 லட்சம் பேருக்கு கூட தகவல், சுற்றறிக்கை, செயல்முறைகளை அனுப்பலாம். இது ஒரு தகவல் புரட்சியாக மாறும். ஆசிரியர்கள் முயற்சி எடுத்து, 10 நாட்களுக்குள் முடியுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.