சென்னை:'கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி சம்பவம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் முன்னேற்றத்தை காட்டியுள்ளதால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற தேவையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 65 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவு
வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் இன்பதுரை, பா.ம.க., செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு மனுக்கள் தாக்கல் செய்தனர். சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை தள்ளி வைக்கும்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் கோரினார். இதையடுத்து, விசாரணையை, வரும் 11ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.தமிழக அரசின் தலைமைச் செயலர் தாக்கல் செய்த அறிக்கை:கள்ளச்சாராய இறப்பு சம்பவம் நடந்த அன்றே, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் வந்து நிலைமையை கண்காணித்தனர். இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி வந்து, நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய்; சிகிச்சையில் இருந்தவர்களுக்கு, தலா 50,000 ரூபாய் நிவாரணமாக, அரசு அறிவித்தது.முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., பிரிவு, வழக்கை பதிவு செய்தது. கலெக்டர், மதுவிலக்கு எஸ்.பி., இடமாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி., உள்ளிட்ட ஒன்பது அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மெத்தனால் கலப்பு
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக, 21 பேரை கைது செய்தனர். 700 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுவரை, 132 பேரிடம் விசாரணை நடந்து, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.செங்கல்பட்டு மற்றும் மரக்காணத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் மெத்தனால் கலப்பு 99.1 சதவீதம் என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில், மாதிரியை ஆரம்பகட்டமாக சோதித்ததில், மெத்தனால் கலப்பு 8.6 முதல் 29.7 சதவீதம் என தெரிய வந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக, அந்த தொகுதி எம்.எல்.ஏ., புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டது. போலீஸ் நிலையங்கள், சப் - இன்ஸ்பெக்டர் முதல் மாவட்ட நிர்வாகம் வரை விசாரித்ததில், அப்படி எந்த புகாரும் வரவில்லை. பின்பு தான், கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சபாநாயகரின் அனுமதி கேட்டு, சட்டசபை செயலகத்தில் கடிதம் அளித்திருப்பதாக தகவல் கிடைத்தது.அரிதான வழக்குகளில் தான், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யை பயன்படுத்த வேண்டும். இந்த வழக்கில், போதிய முன்னேற்றத்தை காட்டி உள்ளோம். எனவே, வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கான சூழ்நிலை எழவில்லை. கடந்த 30ம் தேதி வரை, 65 பேர் இறந்துள்ளனர். சிறப்பான சிகிச்சையால், 145 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.