உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐ.ஐ.டி., வளர்ச்சிக்கு ரூ.228 கோடி! வள்ளலாக அள்ளித் தந்த முன்னாள் மாணவர்

சென்னை ஐ.ஐ.டி., வளர்ச்சிக்கு ரூ.228 கோடி! வள்ளலாக அள்ளித் தந்த முன்னாள் மாணவர்

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யின் வளர்ச்சிக்கு, அதன் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான கிருஷ்ணா சிவுகுலா, 228 கோடி ரூபாய் நேற்று வழங்கினார்.உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யில், 1970ல், செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்ப படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர், கிருஷ்ணா சிவுகுலா. இவர், மும்பை ஐ.ஐ.டி.,யில் ஆய்வுகளை செய்து, ஹார்வர்டு பல்கலையில் எம்.பி.ஏ., படித்து, ஹாப்மென் குழும நிறுவனங்களின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். மிக சிக்கலான வடிவியலுடன் கூடிய சிறிய உலோகம் மற்றும் செராமிக் பாகங்களை தயாரிக்கும் எம்.ஐ.எம்., எனும் நிறுவனத்தை, பெங்களூரில் நிறுவி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார். 2,500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து படிக்க வைக்கிறார். சாதாரண குடும்பம்இவர் நேற்று, 228 கோடி ரூபாய்க்கான காசோலையை, சென்னை ஐ.ஐ.டி.,க்கு நன்கொடையாக வழங்கினார். அவர் கூறியதாவது: உலகின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி.,யும் ஒன்று. சாதாரண குடும்பத்தில் பிறந்த நான், இங்கு படித்ததை பெருமையாக நினைக்கிறேன். இங்கு மகிழ்ச்சியாக படித்தேன். இங்குதான் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றேன். உலகின் பல முனைகளுக்கு செல்ல, இந்த நிறுவனம் தான் எனக்கு உதவியது. நான் படித்த கல்வி நிறுவனங்களுக்கு, தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறேன். ஏற்கனவே, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் மும்பை ஐ.ஐ.டி.,க்கு நிதியுதவி செய்துள்ளேன். நான் நினைத்துப் பார்க்காத வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இந்த நிறுவனத்திற்கு, நினைத்துப் பார்க்காத வகையில் உதவ வேண்டும் என்று நினைத்தேன். என் மனைவி, பெங்களூரில் டாக்டராக உள்ளார். அவரின் ஒப்புதலுடன், இந்த தொகையை வழங்குகிறேன். இதனால், இங்கு படிக்கும் மாணவர்கள் உயரிய நிலையை அடைவர் என நம்புகிறேன்.அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மகிழ்ச்சி, எனக்கு ஆரோக்கியத்தை தரும். அதுதானே வாழ்வின் ஆதாரம். இவ்வாறு அவர் கூறினார். நிதியுதவியை பெற்ற பின், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது: சென்னை, ஐ.ஐ.டி., வளர்ச்சிக்கு, அரசின் நிதி மட்டும் போதாது. அரசின் நிதியில், பழைய திட்டங்களை தான் செயல்படுத்த முடியும். ஆனால், புதிய புதிய கண்டுபிடிப்புகளும், படிப்புகளும் தான் நிறுவனத்தை உலகத் தரத்துக்கு வளர்க்கும்.அதற்காக, 'டெக் ட்ரிவன் சி.எஸ்.ஆர்.,' எனும் முறையில், முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனங்கள் உள்ளிட்டோரிடம் இருந்து, கடந்தாண்டு, 513 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அதில், முன்னாள் மாணவர்களிடம் இருந்து மட்டும், 367 கோடி திரட்டப்பட்டது. இது, முந்தைய ஆண்டை விட 282 சதவீதம் அதிகம். இந்த நிதியில் இருந்து, உள்கட்டமைப்பு, அதிநவீன ஆய்வுக்கூடம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை கவனிக்கிறோம்.இந்நிலையில், கிருஷ்ணா சிவுகுலா மட்டுமே, 228 கோடி ரூபாயை வழங்கி உள்ளார். ஏற்கனவே, இங்குள்ள காவேரி விடுதியின் கட்டுமானத்துக்கு சில கோடி ரூபாயை, அவர் வழங்கினார். இங்குள்ள ஒரு பகுதிக்கு, 'கிருஷ்ணா சிவுகுலா பிளாக்' என, பெயர் சூட்டப்படும். புதிய ஆராய்ச்சிஅவரின் நிதியில் இருந்து, சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கொடையாளர், விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பதால், இங்கு, உடல்நலம், விளையாட்டு சார்ந்த செயல்பாடுகள் வளர்க்கப்படும்.'ஹை ரிஸ்க் ஹை ரிவார்ட்' எனும் முறையில், புதிய ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டு சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 'சார்க்' அமைப்பு நாடுகள் உள்ளிட்ட, வளரும் நாடுகளில் இருந்து படிக்க வரும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். உலகின் முக்கிய கண்டுபிடிப்புகளை, மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், 'சாஸ்த்ரா' என்ற சிறப்பு மலரை வெளியிட்டு வருகிறோம். அதை மாத இதழாக்கி, மாணவர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் டீன் மகேஷ் பஞ்சக்நுலா, தலைமை செயல் அலுவலர் கவிராஜ் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை