உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி பறிப்பு மா.செ.,க்கள், கவுன்சிலர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி பறிப்பு மா.செ.,க்கள், கவுன்சிலர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

சென்னை:சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலர்கள் கனிமொழி, ஐ.பெரியசாமி, பொன்முடி, முதன்மை செயலர் கே.என்.நேரு, அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்தது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:மாவட்ட செயலர்களை பேச அழைத்தபோது, எல்லாரும் தயங்கினர்.சிறிது நேர அமைதிக்குப் பின், முதல் ஆளாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு பேச எழுந்தார். 'தி.மு.க.,வுக்கு பட்டியலினத்தவர் ஓட்டு வங்கி வலிமையாக இருக்கிறது. 'அதனால், கட்சியின் ஆதிதிராவிடர் நலப்பிரிவு நிர்வாகிகளை, மாவட்ட செயலர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்றார்.

ஓட்டு சதவீதம் குறைவு

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலர் கவுதமசிகாமணி பேசுகையில், லோக்சபா தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து வருவதாகவும், சட்டசபை தேர்தலில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி பேசுகையில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலை விட ஓட்டுகள் குறைந்தது குறித்து விளக்கம் அளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டதால் தான், ஓட்டுகள் குறைந்திருப்பதாகக் காரணம் தெரிவித்தார்.துாத்துக்குடி வடக்கு மாவட்ட செயலர் கீதா ஜீவன் பேசுகையில், 'எங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதி வாரியாக, கருணாநிதி நுாற்றாண்டை ஒட்டி சிலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன' என்றார்.அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'என்னிடம் மட்டும் தனியாக வந்து, உங்கள் குறைகளை சொல்கிறீர்கள்; புலம்புகிறீர்கள். ஆனால், இங்கே பேச அழைத்தால் மவுனம் சாதிக்கிறீர்கள்.'இது உங்களுக்கே நல்லாயிருக்குதா? கருணாநிதி காலத்தில், மாவட்ட செயலர்கள் தங்கள் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாகப் பேசுவர். மாவட்ட செயலர்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஏற்று, கட்சி தலைமையும் வழிநடத்தும்' என்றார்.

விசாரணை

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நாகப்பட்டினம் மாவட்ட செயலர் கவுதமன், கட்சி நிர்வாகிகளை அனுசரித்துச் செல்லவில்லை என, புகார் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.அதற்கு கவுதமன், 'நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள்; இனிமேல் புகார் வராத அளவுக்கு நடந்து கொள்கிறேன்' என்றார்.இறுதியாக, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'சில மாவட்ட செயலர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. உரிய முறையில் விசாரணை நடத்தப்படும். அரவணைத்துச் செல்பவரே மாவட்ட செயலர்; வெற்றி பெறுபவரே வேட்பாளர். 'உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும்பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, இதுபோன்ற புகாரில் இரண்டு மேயர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.'அதனால், கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால், பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்' என்றார்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்