கோவை:''பிரதமர் மோடி, என் கையை இறுகப்பற்றி, வாழ்த்து சொன்ன அந்த ஒரு நொடி, மெய் சிலிர்த்தது,'' என்றார், கோவையை சேர்ந்த சூழல் ஆர்வலர் யோகநாதன்.அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டராக இருந்து கொண்டே, மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தவர் யோகநாதன். மர மனிதன் என்று அழைக்கப்படும் இவர், 30 ஆண்டுகளில் நட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை, மூன்று லட்சம்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி கவுரவித்தார். அதில், யோகநாதனும் ஒருவர்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமரை ஒரே இடத்தில் சந்தித்த இவர் ஜனாதிபதி, பிரதமர் பாராட்டியதை மெய் சிலிர்க்க விவரிக்கிறார்.அவர் கூறியதாவது:எனக்கு அழைப்பிதழ் வழங்கும் போதே பெரியளவில், மரியாதை வழங்கப்பட்டது. போஸ்ட் மாஸ்டர் ஒருவர், தேசியக் கொடியில் வைத்து தான் அழைப்பிதழை வழங்கினார்.டில்லி ராஷ்டிரபதி பவனில் இருந்து பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், 'நீங்கள் மட்டும் வர வேண்டும்' எனத் தெரிவித்தனர். என்னால் தனியாக செல்ல முடியாததால், 'வரவில்லை' எனத் தெரிவித்து விட்டேன்.அதன்பின், 'என்னுடன் யார் வருகின்றனர்' என, மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டனர். என் மகள் வருவதாக தெரிவித்தேன். எங்களது அனைத்து தேவைகளையும் உரிய நேரத்தில் பூர்த்தி செய்தனர். மிகப்பெரிய கோட்டை
டில்லி சென்ற என்னையும் சேர்த்து, 20 பேரை ஜனாதிபதி கவுரவித்தார். தமிழகத்தில் இருந்து சென்ற ஒரே ஆள் நான் தான். பிரதமரும் சாதாரண மனிதராக பழகியது பெரிய விஷயம். பாதுகாப்பு அம்சங்கள் பிரமிக்க வைத்தன. என் அருகில் வந்த போது உதவியாளர், 'ட்ரீ மேன் ஆப் இந்தியா' யோகநாதன், பஸ் கண்டக்டர்' என, ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அவர் நின்று, வணக்கம் கூறி, வாழ்த்துக்கள் தெரிவித்தார். அந்த நிமிடம் மறக்க முடியாத ஒன்று.அதன்பின், 15 அடி இடைவெளியில் வந்த, நம் பிரதமர் மோடி, ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அவரிடமும் உதவியாளர் ஒருவர், 'ட்ரீ மேன் ஆப் இந்தியா' யோகநாதன், பஸ் கண்டக்டர்' என, தெரிவித்ததும், அருகில் வந்து இரு கைகளையும் இறுகப்பற்றிக் கொண்டார்.அவர் கைகளை பற்றியது, 20 வயது இளைஞர் பற்றியது போல இருந்தது. என் இரு தோள்களையும் தட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்தார். அந்த நிமிடம் மெய் சிலிர்த்து போனது. அந்த தருணம் என்னால் வாழ்வில் மறக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.