| ADDED : மே 24, 2024 03:56 AM
சென்னை : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே, கரைசுத்துப்புதுாரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயகுமார் தனசிங், 60. அவர், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். கடந்த, 4ம் தேதி வீட்டின் அருகே, தோட்டத்தில் மின் ஒயரால் கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.ஜெயகுமார் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, முடிவுக்கு வர முடியாமல், தனிப்படையினர் திணறினர். புலனாய்வுக்கு வேண்டிய அறிவியல் ரீதியான ஆய்வு முடிவுகள் கிடைக்கவில்லை.இதனால், மர்ம மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முதல் விசாரணையை துவக்கினர்.