| ADDED : ஜூன் 01, 2024 03:45 AM
சென்னை : கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில், 380 மருந்தகங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மருந்து, மாத்திரைகள், 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. மத்திய அரசு, 'ஜெனரிக்' எனப்படும் பொது மருந்துகள் தரமாக மற்றும் நியாயமான விலையில் கிடைக்க, 'ஜன் அவ்ஷாதி' என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை துவக்கி வருகிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 துவக்க, கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்து, கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் ஒருவர் கூறியதாவது:தற்போதுள்ள கூட்டுறவு மருந்தகத்தில், தனியார் நிறுவனங்களின் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. மக்கள் மருந்தகத்தில் ஜெனரிக் வகை மருந்துகள் விற்கப்படும். அவை, மத்திய அரசு அனுமதித்த டீலர்களிடம் இருந்து வாங்கப்படும் என்பதால், மிகக் குறைந்த விலைக்கு தரமான மருந்துகள் மக்களுக்கு கிடைக்கும். தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் மருந்தகம் துவக்க, இடவசதி தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கூடலுாரில் ஒரு இடமும், ஊட்டியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் இடம் கண்டறிந்ததும், மக்கள் மருந்தகங்கள் விரைந்து துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.