சென்னை:முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தொடர்ந்த அவதுாறு வழக்கில், எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யாததால், அவரது உறவினருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலத்தின் உரிமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மருமகன் நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அடியாட்கள் வாயிலாக மிரட்டி நிலத்தை அபகரித்ததாக, ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்தார்.இதையடுத்து, ஜெயகுமார், அவரது மகள், மருமகனுக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்த செய்தி வெளியாகி, தன் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், தன்னைப் பற்றி அவதுாறு கருத்து வெளியிட தடை கோரியும், மகேஷுக்கு எதிராக, ஜெயகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. எழுத்துப்பூர்வ வாதத்தை மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும், 583 நாட்கள் கடந்து விட்டன என்றும் ஜெயகுமார் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படி மகேஷுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை 16க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.