சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,520 ரூபாய் குறைந்தது. சர்வதேச நிலவரங்களால், கடந்த ஒரு வாரமாக, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,840 ரூபாய்க்கும்; சவரன், 54,720 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 100.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 190 ரூபாய் குறைந்து, 6,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிந்து, 53,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 4.50 ரூபாய் குறைந்து, 96 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சீனா இரு தினங்களாக தங்கம் கொள்முதலை முழுதுமாக நிறுத்தியது. இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து, நம் நாட்டிலும் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.