உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 67 பேருக்கு முழு மதிப்பெண் எப்படி? நீட் தேர்வு குறித்து அமைச்சர் சந்தேகம்

67 பேருக்கு முழு மதிப்பெண் எப்படி? நீட் தேர்வு குறித்து அமைச்சர் சந்தேகம்

சென்னை:''நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ள நிலையில், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது சாத்தியமற்றது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் கூறியதாவது:இந்தாண்டு நடந்த, 'நீட்' தேர்வு குளறுபடியும், குழப்பமுமாக உள்ளது. இதுவரை ஓரிரு மாணவர்கள் மட்டுமே, 720 முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்தாண்டு, 67 பேர் பெற்றுள்ளனர்.

குறைக்கப்படும்

மொத்தம், 180 வினாக்கள் உள்ள நிலையில், சரியாக பதிலளித்தால் நான்கு மதிப்பெண் அளிக்கப்படும்; தவறாக பதிலளித்தால் ஐந்து மதிப்பெண் குறைக்கப்படும். ஆனால், மற்றொரு தேர்வுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக கூறுவது ஏற்புடையது அல்ல. நீட் தேர்வை பிற்பகல் 2:00 மணிக்கு துவங்கி, மாலை 5:20 மணி வரை நடத்துகின்றனர். இந்நேரங்களில் உள்ளே அனுமதிக்கப்படுவோரை, நேரம் முடிந்தால் தான் வெளியே விடுவர். தாமதமாக வரும் மாணவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. இதனால், மாணவர்களுக்கு எவ்வாறு நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துஉள்ளது. நீட் தேர்வை, 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமை ஒப்புகொண்டுள்ளது. இவ்வாறான பல்வேறு குழப்பங்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீட் தேர்வு வந்த முதல் ஆண்டில், 31 சதவீதம் பேருக்கு தான், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைத்தது. மற்ற 69 சதவீதம் பேர், ஐந்து முறைக்கு மேல் தேர்வு எழுதியுள்ளனர். ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், நீட் தேர்வு பயிற்சிக்கு, ஐந்து முறைக்கு மேல் செல்வது சாத்தியமானதா, எவ்வளவு பணம் செலவாகும்? ஹரியானா மாநிலம் பரிதாபாத் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் எட்டு பேர், முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். அதில், ஆறு பேர் முழு மதிப்பெண்ணும், இரண்டு பேர் 718, 719 மதிப்பெண்ணும் பெற்றது எப்படி?

மாணவர்களுக்கு அநீதி

இதுபோன்ற மிகப்பெரிய மோசடி எங்கெல்லாம் நடந்துள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணை மதிப்பெண் என்பது மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். யாரிடம் கேட்டு முடிவெடுத்தனர்? இது மாணவர்களுக்கு செய்த அநீதி. இதற்கு, நீட் தேர்வு விலக்கு மட்டுமே தீர்வாகும். இதுகுறித்து, தமிழக அரசு தரப்பில் நீதிமன்றம் செல்ல மாட்டோம்; ஆனால், நீட் விலக்கு தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை