சென்னை:ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பப்படாததால், இரு மாதங்களுக்கு மொத்தமாக சேர்த்து வழங்க முடியாமல் கடை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.ஒரு மாதம் பொருட்களை வாங்கவில்லை எனில், அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படாது. கடந்த மே மாதம் முதல் பருப்பு, பாமாயில் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அவற்றை வினியோகம் செய்ய முடியவில்லை.எனவே ஜூன் மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள, அரசு அனுமதித்தது. அதற்கு ஏற்ப முழு அளவில் பொருட்கள் அனுப்பப்படவில்லை என்ற, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ஒரு ரேஷன் கடையில், 1,000 கார்டுதாரர்கள் இருந்தால், 700 - 800க்கு தான் முழு அளவில் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறே கடந்த மாதமும் பருப்பு, பாமாயில் அனுப்பப்பட்டது. கடந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் இம்மாதம் சேர்த்து வாங்கி கொள்ளுமாறு, அரசு தரப்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த மாதம் வாங்காதவர்கள் வந்து, இம்மாதமும் சேர்த்து, இரு மாதங்களுக்கான பொருட்களை வழங்குமாறு கேட்கின்றனர். ஆனால், பல கடைகளுக்கு பாமாயில், பருப்பு வந்து சேரவில்லை. எனவே, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விரைந்து அனுப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் வாங்காதவர்கள், இம்மாதம் 31ம் தேதி வரை வாங்க அவகாசம் தரப்பட்டு உள்ளது. விரைந்து பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன' என்றார்.