உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத பணப்பரிமாற்றம்: தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சினிமா பட தயாரிப்பாளர், தொழில் வர்த்தகர் மற்றும் வங்கி அதிகாரி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை அசோக் நகர், 19வது அவென்யூவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன், 40. இவர், லிப்ரா புரடெக் ஷன் என்ற கம்பெனியை துவங்கி, சினிமா படங்களை தயாரித்து வருகிறார். இவர், 'டிவி' சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துள்ளார். கடந்த 2020ல், ரவீந்தர் சந்திரசேகரன், 'மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திடக்கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இதில், 200 கோடி ரூபாய் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என, சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த தொழில் வர்த்தகர் பாலாஜி, 48, உள்ளிட்டோரிடம் கூறியுள்ளார்.புதிய திட்டங்கள் துவங்குவதற்கான ஆவணங்களை பாலாஜியிடம் கொடுத்துள்ளார். அதை நம்பி, பாலாஜியும், 16 கோடி ரூபாயை ரவீந்தர் சந்திரசேகரனிடம் கொடுத்துள்ளார். இவர், மின்சாரம் தயாரிப்பு திட்டம் ஏதும் துவங்காமல், பணத்தையும் திரும்ப ஒப்படைக்காமல் மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து கடந்தாண்டு செப்டம்பரில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாலாஜி புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். ரவீந்தர் சந்திரசேகரன் போலி ஆவணம் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக, ரவீந்தர் சந்திரசேகரன், பாலாஜி மற்றும் வடபழனியில் வங்கி மேலாளர் சத்திய ஸ்ரீ சர்க்கார் ஆகியோர் வீடு உட்பட ஐந்து இடங்களில் நேற்று காலை, 6:00ல் இருந்து, மாலை,7:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோரிடமும் விசாரித்துள்ளனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்து இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதால், அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை