சென்னை:மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில், கடந்த நிதியாண்டில் அதிக அளவாக, 2,547 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின்வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில் ஐந்து அனல் மின்நிலையங்கள் உள்ளன.அவற்றில் தினமும் சராசரியாக, 7 - 8 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அனல்மின் நிலையங்களின் அலகுகளில் பழுது, 'பாய்லர் டியூப் பஞ்சர்' போன்றவற்றால், அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தனியாரிடம் மின்சாரம் வாங்கவே, மின்வாரிய சொந்த மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் முறையாக, 2023 - 24ம் நிதியாண்டில், 2,547 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவே, அதற்கு முந்தைய நிதியாண்டில், 2,268 கோடி யூனிட்களாக இருந்தது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:துாத்துக்குடி, சேலம் - மேட்டூர் அனல்மின் நிலையங்கள் ஆயுட்காலத்தை தாண்டி செயல்பட்டு வருகின்றன.இதுவே, மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம். எனவே, சரியாக திட்டமிட்டு மின் நிலையங்களில் பராமரிப்பு செய்யப்பட்டது. இதனால், தற்போது அனல் மின் நிலையங்களில் அதிக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.திருவள்ளூரில், 800 மெகா வாட் திறன் உடைய வட சென்னை - 3 அனல் மின் நிலையத்தில், கடந்த மார்ச்சில் மின் உற்பத்தி துவங்கியது.எனவே, வரும் காலங்களில் சொந்த மின் உற்பத்தியை அதிகரித்து, மின் கொள்முதல் வெகுவாகக் குறைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாக்ஸ்/
ஆண்டு வாரியாக கோடி யூனிட்கள்-ஆண்டு - மின் உற்பத்தி 2020/ 21 - 1,5552021/ 22 - 2,0392022/ 23 - 2,2682023/ 24 - 2,547