நாட்டின், 78வது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். 78-வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடு தயாராவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். செங்கோட்டை, மாநிலங்களின் தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதை காண்பது, நம் இதயங்களில் எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆக., 15ல் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியர்கள் தேசபக்தி கீதங்களை பாடுகின்றனர்; இனிப்புகளை பரிமாறிக் கொள்கின்றனர். நம் தேசம் மற்றும் இந்தியர்களாக நாம் இருப்பதில் இருக்கும் கவுரவம் குறித்து, சிறுவர்கள் உரையாற்றுவதை காணும் போது, அவர்களுடைய சொற்களிலே சுதந்திரப் போராட்ட வீரர்களின் உணர்வுகள் எதிரொலிப்பதை கேட்க முடிகிறது.நம் நாட்டில் இந்தாண்டு பொதுத் தேர்தல்கள் நடந்தன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 97 கோடி. இதுவே ஒரு வரலாற்று சாதனை. கோடை வெப்பத்தில் பணியாற்றி, தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் கமிஷனுக்கு நன்றி. தன்னிறைவு
கடந்த 2021 --- -2024க்கு இடைப்பட்ட காலத்தில், ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைந்திருப்பதன் வாயிலாக, மிக வேகமாக முன்னேற்றம் காணும் பொருளாதாரங்களில் நம் நாடு இடம் பிடித்திருக்கிறது. இதனால், அதிகப் பணப்புழக்கம் ஏற்பட்டிருப்பதோடு, வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்போரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது.உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக நம் நாடு மாறியுள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இதற்கு விவசாயிகள், இளைஞர்கள் உறுதுணையாக இருப்பர். நம் விவசாயிகள், எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, வேளாண் உற்பத்தியை தொடர்ந்து உறுதி செய்துள்ளனர். வேளாண்மையிலும், நம் மக்களுக்கு உணவூட்டுவதிலும், இந்தியா தன்னிறைவை அடைய மிகச் சிறந்த பங்களிப்பை அவர்கள் வழங்கிஉள்ளனர். எதிர்கால தொழில்நுட்பத்தில் பெரும் வளத்தை கருதி, செமி கண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளை அரசு தீவிரமாக மேம்படுத்தி வருகிறது. மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி, அவர்களது வளர்ச்சியை ஊக்கப்படுத்தி உள்ளது. அது, நம் நாட்டை மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றி உள்ளது. திறன் பயிற்சி
நம் சமுதாயத்தில், பெண்கள் சமமாக மட்டுமின்றி, சமம் என்பதற்கு மேலாகவே மதிக்கப்படுகின்றனர். மகளிர் நலன் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கு, இந்த அரசு சம முக்கியத்துவம் அளிக்கிறது.தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மகளிர் நலனுக்காக அரசால் பல்வேறு சிறப்புத் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் அமலாகியுள்ள புதிய குற்றவியல் சட்டங்கள், குற்ற வழக்குகளில் தண்டனை பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தை, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையாக பார்க்கிறேன்.இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்த ஏதுவாக, அவர்களுக்கான திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிற வாய்ப்புகளுக்கு உதவும் வகையில், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் முன்னணி தொழிற்சாலைகளில், ஒரு கோடி இளைஞர், தொழில் பழகுனர் பயிற்சியை பெறுவர்.இவை அனைத்தும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளத்திற்கான பங்களிப்பாக அமையும். சாதனை
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இதுவரை காணாத முன்னேற்றத்தை நம் நாடு அடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, 'ககன்யான்' திட்டத்தின் துவக்கத்தை, உங்களோடு கூட நானும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தற்போது நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், நம் வீரர்கள் - வீராங்கனையர் சிறப்பாக செயல்பட்டனர். 'டி - 20' கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, இந்திய அணி சாதனை படைத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.செஸ், பேட்மின்டன் என, அனைத்து விளையாட்டுகளிலும் நம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றனர்.