உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி., வெங்கடேசன் இழிவாக பேசுவது அறிவான செயலா? *ஆதீனங்கள் கண்டனம்

எம்.பி., வெங்கடேசன் இழிவாக பேசுவது அறிவான செயலா? *ஆதீனங்கள் கண்டனம்

மதுரை:சமீபத்தில் லோக்சபாவில் பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், 'செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தன் அந்தப்புரத்தில் எத்தனை நுாறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா? அந்தச் செங்கோலை இந்த அவையில் வைத்திருப்பதன் வாயிலாக, இந்த நாட்டு பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று ஆவேசமாக பேசினார். மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பெருமைமிக்க தமிழகத்தைச் சேர்ந்த, அதுவும் மீனாட்சி செங்கோல் பெற்று ஆட்சி புரியும் மதுரையைச் சேர்ந்த எம்.பி., தமிழக மன்னர்களையே அவமதிப்பதா என ஆதீனங்களும், ஆன்மிகவாதிகளும் கொதித்து கொந்தளிக்கின்றனர்.

யாருக்காகவோ பேசியுள்ளார்

மதுரை ஆதீனம்: மன்னர்கள் அனைவரையுமே தவறாகத்தான் வெங்கடேசன் பேசியுள்ளார். அப்படியானால் பாரி, மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன், செத்தும் கொடுத்த சீதக்காதி, அதியமான், பாண்டியர், திருமலை நாயக்கர் உள்ளிட்ட மன்னர்கள் அனைவரும் மோசமானவர்களா.மக்களால் ஓட்டளித்து தேர்வு செய்யப்பட்டு லோக்சபாவுக்கு சென்றிருக்கும் ஒரு எம்.பி., இப்படி பேசுவது முறையல்ல. அவரை பின்னாலிருந்து யாரோ இயக்குவது போல் தெரிகிறது. இத்தனைக்கும் மன்னர்கள் குறித்த வரலாற்று நுால் எழுதியவர் வெங்கடேசன். அவரே இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது வருத்தத்துக்குரியது. பூம்புகார் படத்தில் கணவனை கொன்ற பாண்டிய மன்னனை பார்த்து கண்ணகி, 'உனக்கு எதுக்கு செங்கோல்' என கேட்டாள். 'தவறு இழைத்து விட்டேன். நேர்மையை போற்றும் என் செங்கோல் வளைந்து விட்டது' என மன்னர் கூறினார். அந்த வசனங்களை எழுதியது முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி. இதையெல்லாம் மனதில் வைத்தாவது, இந்த மாதிரி விஷயங்களில் வெங்கடேசன் கவனமாக பேச வேண்டும்.

திருக்குறளை படிக்க வேண்டும்

குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதீனம்: நம் சமயம், செங்கோல், பசுவின் சிறப்பு பற்றி தொடர்ந்து பலர் அவமானமாக பேசுவது தமிழருக்கெல்லாம் வருத்தம் தான்.மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்சபா சென்றவர் வெங்கடேசன். இந்த மதுரையில்தான் நீதி தவறியபோது நீதி வளைந்தது என்பதற்காக மன்னன் உயிரை மாய்த்ததையெல்லாம் நான் அனைவரும் அறிவோம். புதிய எம்.பி.,க்கள் பதவி ஏற்கும்போது, உ.பி.,யில் இருந்து வந்த எம்.பி., ஒருவர், 'செங்கோலை பார்லிமென்டில் இருந்து எடுக்க வேண்டும்' என பேசினார். அதை அம்மாநில முதல்வர் கடுமையாக கண்டித்தார். அதுபோல நம் எம்.பி., பேசியதை இங்கிருப்போர் கண்டித்திருக்க வேண்டும்.செங்கோலை சிறுமைப்படுத்துவது போல பேசும் வெங்கடேசன், முழுமையாக திருக்குறளை படிக்கவில்லை என்று தெரிகிறது. உலக பொதுமறை திருக்குறளில் செங்கோன்மை அதிகாரத்தில் வள்ளுவர், 'வேலன்று வெற்றி தருவது மன்னனது கோலதுாஉம் கோடா தெனின்' என்று சொல்கிறார்.ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது வேலல்ல. நேர்மை தவறாது ஆட்சி செய்வதுதான் சிறப்பு என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். இதுபோன்ற அறிவுசார் நுால்களை கற்றிருந்தால், இதுபோல தவறான கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல மாட்டார்கள். அந்த வகையில், இனியாவது வெங்கடேசன் திருக்குறளைப் படிக்க வேண்டும். எதிர்காலத்திலும் அவர் இப்படியே பேசினால், மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

குறுகிய எண்ணம் கொண்டவர்

சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பேரூர் ஆதீனம்: நேரு பிரதமராக பொறுப்பேற்றபோது திருவாவடுதுறையில் இருந்து ராஜாஜியின் ஏற்பாட்டில் அவருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அதன் அருமை தெரியாதவர்கள், அதை அருங்காட்சியகத்தில் வைத்து விட்டனர். அதற்கு மீண்டும் மரியாதை செய்ய பிரதமர் மோடி 20க்கும் மேற்பட்ட ஆதீனங்களை அழைத்து விழா நடத்தினார். பின், பார்லிமென்டில் செங்கோலைச் சேர்த்தார். அது, தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. அதுபற்றி குறுகிய எண்ணத்துடன் மதுரை எம்.பி., வெங்கடேசன் குறிப்பிட்டு இருப்பது சரியானதல்ல.நேரு இறைநம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அவர் செங்கோலுக்கும், ஆதீனத்திற்கும் பெருமை சேர்க்கும்படியாக செங்கோலை பெற்றுக் கொண்டதை வரலாறு சொல்கிறது. அந்த வரலாறு தெரியாமல் தான், இன்றைக்கு அதை இழிவாக பேசுகிறோம். திருக்குறளை எடுத்துக் கொண்டால், அதில் செங்கோன்மை என்ற அதிகாரமே உள்ளது. அது செம்மையான ஆட்சி முறையை சொல்கிறது.இப்படி அனைத்து வகைகளிலும் சிறப்புக்குரிய செங்கோல், இன்று பார்லிமென்டில் இருப்பது தமிழகத்திற்கான பெருமை. இறை நம்பிக்கை இல்லாதவர்கள்தான் கேரளாவிலும் ஆட்சி செய்கின்றனர். ஆனால், அவர்கள் சங்கரரைப் பற்றி தவறாக எதுவும் சொல்வதில்லை. ஏனெனில், அவர் மண்ணின் மைந்தர் என்பதை உணர்ந்து, மதித்து போற்றுகின்றனர்.

வருத்தத்திற்குரியது

சாது சண்முக அடிகளார், பழனி ஆதீனம்: புனிதமான ஒரு செயலை அறியாமையால், அதன் நன்மை புரியாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., தவறாக பேசுவது வருத்தத்திற்குரியது. 'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்' என்றும், 'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்' என்று பயனில்லாத சொற்களைவிட, பயனுள்ள சொற்களை பேசி, அவர்களை சார்ந்தோர் நன்மை பெற வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.அதுமட்டுமின்றி, 'நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய் சொல்' என்றும் அவர் கூறுவார். மேலும்,'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை குலத்தின்கண் ஐயப் படும்' என்றும் சொல்வார்.அதாவது உலகமே புகழக்கூடிய நற்செயலை தவறாக சொல்வது என்றால், அவர்கள் நல்ல குலத்தில் பிறந்தவர்களா என்று சந்தேகப்பட வைக்கும் என்கிறார் வள்ளுவர்.எனவே, நாம் இழிவான செயலை செய்யாமல், மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.எனவே, செங்கோலை இழிவுபடுத்தும்படியாக பேசிய வெங்கடேசனுக்கு எல்லாருமாக ஒருங்கிணைந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 06, 2024 06:02

வெங்கடேசனுக்கு ...... இருந்தா இப்படி பேசுவாரா?


Mani . V
ஜூலை 06, 2024 06:00

வெங்கடேசனுக்கு அறிவு இருந்தா இப்படி பேசுவாரா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை