| ADDED : மே 16, 2024 02:50 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே, வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்ட கான்ட்ராக்டரிடம் ரூ. 15 ஆயிரம் கமிஷன் வாங்கிய, ஊராட்சித் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில், குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் செய்து வருகிறது. மஞ்சக்குழி ஊராட்சியை சேர்ந்த சப்-கான்ட்ராக்டர் சந்தோஷ் என்பவர் மூலம் பணி நடந்து வந்தது.இப்பணிக்காக, தனக்கு 2 சதவீதம் கமிஷனாக ரூ. 30 ஆயிரம் தர வேண்டும் என, சந்தோஷிடம், மஞ்சக்குழி ஊராட்சித் தலைவர் சற்குருநாதன் கேட்டுள்ளார். பணத்தை இரு தவணையாக கொடுக்கும்படி கூறியுள்ளார்.ஊராட்சித் தலைவருக்கு கமிஷன் கொடுக்க விரும்பாத சந்தோஷ், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நேற்று, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.15, ஆயிரத்தை மஞ்சக்குழி ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் சற்குருநாதனிடம் சந்தோஷ் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், ஊராட்சித் தலைவர் சற்குருநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.மேலும், சம்மந்தம் கிராமத்தில் உள்ள சற்குருநாதன் வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.