| ADDED : மார் 24, 2024 11:23 PM
தென்காசி: ''தென்காசி தொகுதியில் மும்முனை போட்டியில்லை. தாமரைக்கும், உதயசூரியனுக்கும் தான் போட்டி,'' என, பா.ஜ., கூட்டணி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் தெரிவித்தார்.ரயில்வே ஸ்டேஷனில் பா.ஜ., மற்றும் கூட்டணி நிர்வாகிகள் சார்பில் நேற்று ஜான்பாண்டியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவர் கூறியதாவது: யார் என்னைப்பற்றி கருத்துக்கூறினாலும் அவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.தென்காசி தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்துவேன். குறிப்பாக எலுமிச்சை, பூக்கள் அதிகம் விளையக்கூடிய பகுதி இது. இங்கே சென்ட் தொழிற்சாலை கொண்டுவர பாடுபடுவேன். குற்றாலத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன். ஐ.டி., பூங்கா கொண்டு வர முயற்சி செய்வேன்.பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி பிரசாரம் செய்வேன். அவர் ஆட்சியில் ஏழைகளுக்கு வீடுகளை கட்டித் தந்துள்ளார். அது போல் எத்தனையோ நல்ல திட்டங்களை மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் கொண்டு வந்துள்ளார்.என் சொந்த தொகுதியான இங்கு போட்டியிடுகிறேன். இதுவரை இந்த தொகுதியில் வெற்றிபெற்ற எந்த எம்.பி.,யும் எதுவும் செய்யவில்லை. அதனால் எனக்கு வாக்களிக்கும் இந்த தொகுதி மக்களுக்காக நிறைய பாடுபடுவேன்.அவர்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் தெரிவித்து பெற்று தருவேன். லோக்சபாவில் மக்களுக்காக தைரியமாக குரல் கொடுப்பேன். இந்த தொகுதியில் எனக்கு அதிக வெற்றி வாய்ப்பு உண்டு. எனக்கு பிடித்த சின்னம் தாமரை. இந்திய பிரதமர் சின்னம் தாமரை.அதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். தாமரை இல்லையென்றால் நாடே இல்லை என்றார்.