சென்னை : ''எங்கள் மீதான குற்றச்சாட்டை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் நிரூபித்தால், நாங்கள் அரசியலை விட்டு விலகத் தயார்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்தனர்.கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, பா.ம.க., தலைவர் அன்புமணி, 'சங்கராபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் தி.மு.க., - எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் ஆதரவால் தான், அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது' என குற்றம் சாட்டினார்.இது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் நேற்று அளித்த பேட்டி:ராமதாஸ், அன்புமணி ஆகியோர், எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளனர். நான் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். என் சகோதரர் பேரூராட்சி தலைவர். தந்தை ஊராட்சி தலைவராக இருந்தார். வசந்தம் கார்த்திகேயன் தாய், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்துள்ளார்.எங்கள் அரசியல் வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அபாண்டமான பழியை சுமத்தி உள்ளனர். எங்கள் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டை, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் நிரூபித்தால், நாங்கள் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால், அவர்கள் விலக அவர்கள் தயாரா?நாங்கள் தீய நடவடிக்கையில் ஒருபோதும் ஈடுபட மாட்டோம். பா.ம.க., தோல்வி கண்டதால், பூதாகர பிரச்னைகளை உருவாக்குகின்றனர். ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.