| ADDED : ஜூலை 12, 2024 09:24 PM
துாத்துக்குடி:தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், துாத்துக்குடியில் கூறியதாவது:கருணாநிதி குறித்து இழிவாகவும், அவதுாறாகவும் சீமான் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். மாற்றி மாற்றி பேசும் சீமானின் மனநிலையை சோதிக்க வேண்டும்.கருணாநிதி குறித்து தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்துகிறார். பட்டியலின ஜாதியின் பெயரை சொல்லி பாட்டுப்பாடி இழிவை ஏற்படுத்தியுள்ளார். ஜாதி, மதம் குறித்து பேசி, பிரச்னையை உண்டாக்கி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறார், சீமான். இது, ஏற்கத்தக்கதல்ல.இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிறுத்தி, உலக அளவில் பல்வேறு நாடுகளில் சீமான் நன்கொடை பெற்று வருகிறார். தமிழகத்தில், தி.மு.க.,வையும், தலைவர்களையும் எதிர்க்க வேண்டும் என காட்டி கொள்வதற்காக தொடர்ந்து பேசி வருகிறார்.அவர் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக சீமான் தெரிகிறார். தவறான தகவலால் தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது தவறானது. 1967க்கு முன் இருந்தே குற்றச்செயல்கள் நடந்து தான் வருகின்றன. கருணாநிதி முதல்வராக வந்த பிறகு தான் சட்டம், ஒழுங்கு சரி இல்லை என கூறுவது தவறான கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.பின்னணி என்ன?தி.மு.க., குறித்து விமர்சனம் செய்வது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், அவரது பேச்சுக்கு தற்போது பெண் அமைச்சர் ஒருவர் காட்டமான பதில் அளித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அமைச்சர் கீதாஜீவனுக்கு பதில் அளிக்கும் வகையில், சீமான் ஏதேனும் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்தால், பெண்ணுக்கு எதிரானவர் என்று திசை திருப்பும் முயற்சியில், தி.மு.க., தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.