சென்னை:வீடுகளில், 'ஏசி' பயன்பாடு மற்றும் விவசாயத்திற்கு நிலத்தடி நீரை அதிகம் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் தேவை எப்போதும் இல்லாத வகையில், ஏப்., 30ம் தேதி, 20,701 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த, 39 நாட்களில் மட்டும் கூடுதலாக, 1292 மெகா வாட் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. மின் தேவை என்பது ஒரு நாளில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாறக்கூடியது. கடந்த மார்ச்சில் கோடை காலம் துவங்கியதில் இருந்து, வெயில் சுட்டெரித்து வருகிறது. வீடுகளில் இரவில் மட்டுமே பயன்படுத்திய, 'ஏசி' சாதனங்களை, தற்போது பகலிலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கடும் வெப்பம் காரணமாக, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடிய அனைத்து முக்கிய அணைகளும் வறண்டு காணப்படுகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடிக்கு, 'மோட்டார் பம்ப்' வாயிலாக நிலத்தடி தண்ணீரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயத்திற்கான மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பகலில், 4,000 மெகா வாட் மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மின் வாரியம், விவசாயத்திற்கு, சூரியசக்தி மின்சாரத்தை முழுதுமாக வினியோகம் செய்கிறது. இதன் காரணமாக, தமிழக மின் தேவை, பகலில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த, 2023 ஏப்., 20ம் தேதி பகலில் மின் தேவை, 19,387 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே உச்ச அளவாக இருந்த நிலையில், இந்தாண்டு மார்ச் 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு, 19,409 மெகா வாட்டாக அதிகரித்தது.தொடர்ந்து, மின் தேவை அதிகரித்து வருகிறது. ஏப்., 26ம் தேதி மாலை, 3:30 மணிக்கு, 20,583 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, நேற்று முன்தினம் வரை உச்ச அளவாக இருந்தது. ஏப்., 30ம் தேதி மாலை, 3:30க்கு, எப்போதும் இல்லாத வகையில், 20,701 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்தாண்டில் மட்டும் மின் தேவை கூடுதலாக, 1,292 மெகா வாட் அதிகரித்துள்ளது. இதேபோல், ஏப்., 26ல், 45.17 கோடி யூனிட்களாக அதிகரித்த மின் நுகர்வு, அதை விட அதிக அளவாக, 30ம் தேதி, 45.43 கோடி யூனிட்களாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மின் தேவை மற்றும் மின் நுகர்வை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு, மின் உற்பத்தி, மின் கொள்முதலை மேற்கொண்டதால், பற்றாக்குறை ஏற்படவில்லை.சென்னையின் மின் நுகர்வு
இதுவரை இல்லாத அளவு
சென்னையின்
மின் தேவை, இதுவரை இல்லாத அளவாக கடந்த ஏப்., 25ல், 4,368 மெகாவாட்டாக
உயர்ந்தது. இது, எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம் இரவு, 10:30
மணிக்கு, 4,383 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. சென்னை முழுதும்,
ஒரு நாள் பயன்படுத்திய மின்சார அளவான மின் நுகர்வு, 2023 ஜூன், 16ல், 9.27
கோடி யூனிட்களாக இருந்தது. இதுவே, நேற்று முன்தினம் வரை அதிக அளவாக
இருந்தது. எப்போதும் இல்லாத வகையில் மின் நுகர்வு, 9.37 கோடி யூனிட்களாக
அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.