உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வராயன் மலை பகுதிக்கு முதல்வர் போகணும்; முடியாவிட்டால் உதயநிதியை அனுப்பலாம்: ஐகோர்ட்

கல்வராயன் மலை பகுதிக்கு முதல்வர் போகணும்; முடியாவிட்டால் உதயநிதியை அனுப்பலாம்: ஐகோர்ட்

சென்னை:'கல்வராயன் மலைப்பகுதிக்கு, தமிழக முதல்வர் சென்று ஆய்வு செய்ய வேண்டும்; அவர் போக முடியாவிட்டால், அமைச்சர் உதயநிதி சென்று பார்வையிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 66 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக - பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு, தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை, வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து, பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவு:கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு, அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கின்றனவா; அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அப்பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு, நலனுக்கு, அரசு தரப்பில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க வேண்டும். நலத்திட்டங்கள், வசதிகள் சென்று சேர்வதை, அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே, இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.வழக்கு,மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்த அறிக்கையை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களின் கலெக்டர்கள் தயாரித்து வருகின்றனர். அதை, நாளை தாக்கல் செய்கிறேன்,'' என்றார்.இதையடுத்து, விசாரணையை, நாளை தள்ளிவைத்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மலைப்பகுதியாக இருப்பதால், சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உடனடியாக, போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அளிக்க வேண்டும்' என்றனர்.மேலும், கல்வராயன் மலைப்பகுதிக்கு தமிழக முதல்வர் சென்று பார்வையிட்டால், அந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். முதல்வரால் செல்ல முடியவில்லை என்றால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சருடன், அமைச்சர் உதயநிதி சென்று பார்வையிடலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

சி.பி.ஐ., கோரிக்கை; விசாரணை தள்ளிவைப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஆக., 6க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை