18 கிளை சிறைகளை மூட உத்தரவு குற்றவாளிகள் அதிகரிப்பர் என கவலை
திருச்சி:தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள், ஐந்து மகளிர் சிறப்பு சிறைகள், ஒரு சிறுவர்களுக்கான பள்ளி, நான்கு சிறப்பு கிளை சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 106 கிளை சிறைகள், மூன்று திறந்தவெளிச்சிறைகள் உள்ளன. அண்மையில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத சிறைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மதுராந்தகம், ஆரணி, திருத்தணி, செய்யார், மேட்டுப்பாளையம், ராசிபுரம், பரமத்தி, மணப்பாறை, முசிறி, கீரனுார், திருமயம், பட்டுக்கோட்டை உட்பட, 18 கிளைச்சிறைகளை மூட முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் பிறப்பித்தார்.இந்நிலையில், 18 கிளைச் சிறைகளை மூடும் நடவடிக்கைக்கு சிறைத்துறையில் பணியாற்றுவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள சிறைகள், சமூக விரோதிகள் திட்டம் தீட்டும் கூடாரமாக உள்ளன. ஒவ்வொரு சிறையிலும் அனுமதிக்கப்பட்டதை விட, கூடுதலாக கைதிகள் உள்ளனர். இந்த நிலை தான், அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ளது. இந்நிலையில், 18 கிளைச்சிறைகள் நிரந்தரமாக மூடப்பட்டால், அவற்றில் பணியாற்றும், 18 கிளைச்சிறை கண்காணிப்பாளர்கள், 36 ஏட்டுகள் மற்றும் போலீசார் என, 252 பணியிடங்கள் காலியாகும்.கிளைச்சிறைகளில் உள்ள உள்ளூர்வாசிகள், அவர்களின் குடும்பத்தார் மிகவும் சிரமத்துக்கு ஆளாவர். சிறு வழக்குகளில் சிறைக்கு வருபவர்கள், மத்திய சிறைகளுக்கு மாற்றப்படும் போது, பெரும் குற்றவாளிகளாக மாற வாய்ப்பாகி விடும். மத்திய சிறைகளுக்கு கைதிகளை அழைத்துச் செல்ல கூடுதல் நேர விரயம், செலவு ஏற்படும்.கிளைச்சிறைகளை மூடிவிட்டு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைப்பது மிகவும் எளிது. ஆனால், அவற்றை மீண்டும் சிறை அமைக்க தரும்படி கோரினால், எளிதில் நிலத்தை திரும்ப பெற முடியாது. ஆகையால், இவ்விஷயத்தில் அரசு தலையிட்டு, கிளைச்சிறைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ள கிளைச்சிறைகளில் நல்ல நிலையில் உள்ள சிறைகளும் அடக்கம். குறைபாடுகளை களைந்து, பாதுகாப்பை அதிகரித்து, கிளைச்சிறைகள் தொடர்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.