லோக்சபா தேர்தல் பரபரப்புக்கு இடையே, ஒரு செய்தி மனதை சில வினாடி தடுமாற வைத்தது. அது தான், ஆன்மிக உணர்வின் முதன்மை ஆளுமையான ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜின் சமாதி நிலை ஒரு தனிப்பட்ட இழப்பாகும். சில ஆண்டுகளுக்கு முன் சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் மஹா பிரயாணமும், இப்போது சுவாமி ஸ்மரணானந்தாவின் நித்தியப் பயணமும் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனின் லட்சக்கணக்கான பக்தர்கள், துறவிகள் மற்றும் பின்பற்றுபவர்களை போன்று என் இதயமும் சோகத்துடன் உள்ளது.ராமகிருஷ்ணா மிஷனுடனும், பேலுார் மடத்துடனும் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்பதை பலரும் அறிவர். ஒரு ஆன்மிக சாதகர் என்ற முறையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நான் பல்வேறு மகான்களையும், மகாத்மாக்களையும் சந்தித்துள்ளேன். ராமகிருஷ்ணா மடத்திலும், ஆன்மிகத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்களுடன் பழகியிருக்கிறேன். அவர்களில், சுவாமி ஆத்மஸ்தானந்தா, சுவாமி ஸ்மரணானந்தா போன்ற ஆளுமைகளும் உண்டு. அவர்களது புனிதமான சிந்தனைகளும், அறிவும் என் மனதிற்கு நிலையான திருப்தியை அளித்தன. வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தில், பொது சேவையின் மெய்யான கொள்கை கடவுளுக்கு செய்யும் சேவை என, இத்தகைய துறவிகள் தான் எனக்கு கற்பித்தனர்.கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு, ராமகிருஷ்ணா மிஷன் செய்து வரும் பணிகள், நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. இந்த மிஷன், ஆன்மிக உணர்வு, கல்வியில் அதிகாரமளித்தல், மனிதாபிமான சேவை போன்றவற்றுக்காக பணியாற்றுகிறது. 1978-ல் மேற்கு வங்கத்தை பெருவெள்ளம் தாக்கிய போது, ராமகிருஷ்ணா மிஷன் தன் தன்னலமற்ற சேவையால், அனைவரின் இதயங்களையும் வென்றது. 2001ல், குஜராத் மாநிலம் கட்ச் நிலநடுக்கத்தின் போதும், மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தது.பல ஆண்டுகளாக, சுவாமி ஆத்மஸ்தானந்தா, சுவாமி ஸ்மரணானந்தா ஆகியோர் பல்வேறு நிலைகளை பெற்றிருந்த போது, சமூக அதிகாரமளித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.இத்தகைய துறவிகள் நவீன கல்வி, திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் எவ்வளவு தீவிரமாக இருந்தனர் என்பதை, இந்த மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நிச்சயமாக நினைவிருக்கும்.ஆத்மஸ்தானந்தாவின் உயர்ந்த ஆளுமையின் தனித்துவம், என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு கலாசாரத்தின் மீதும், ஒவ்வொரு பாரம்பரியத்தின் மீதும் அவர் கொண்டிருந்த மரியாதையும், ஈடுபாடுமே அதற்கு காரணம்.இந்திய வளர்ச்சி பயணத்தின் பல கட்டங்களில், சமூக மாற்றம் குறித்த புதிய உணர்வை நமக்கு அளித்த சுவாமி ஆத்மஸ்தானந்தா, சுவாமி ஸ்மரணானந்தா போன்ற துறவிகளால், நம் தாய்நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற, இந்தத் துறவிகள் நமக்கு துாண்டுகோலாக இருந்துள்ளனர்.இவர்களின் கோட்பாடுகள் இப்போது வரை நித்தியமானவை. வரும் காலங்களில், இந்த சிந்தனைகள் வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் அமிர்த காலத்தில் நம் மன வலிமையாக மாறும்.இத்தகைய புனித ஆத்மாக்களுக்கு நான் மீண்டும் ஒரு முறை, ஒட்டு மொத்த தேசத்தின் சார்பில் என் அஞ்சலியை செலுத்துகிறேன். ராமகிருஷ்ணா மிஷனுடன் தொடர்புடைய அனைவரும் அவரது பணியை மேலும் முன்னெடுத்து செல்வர் என்றும் நம்புகிறேன். ஓம் சாந்தி.