சங்கங்களை முறைப்படுத்த இழுபறி; பஸ் ஊழியர் ஊதிய பேச்சு தாமதம்
சென்னை : தொழிற்சங்கங்களை முறைப்படுத்துவதாக கூறி, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்படாமல் இருந்தது. தொழிற்சங்கங்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பின், ஊதிய ஒப்பந்தத்துக்கான முதற்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில், ஆகஸ்ட் 27ல் நடந்தது.அரசு தரப்பில் போக்கு வரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளும், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - - அ.தொ.பே., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 84 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இது அறிமுக கூட்டமாகவே இருந்தது. அடுத்தக்கட்ட பேச்சுக்கு, தொழிற்சங்கங்களை முறைப்படுத்தும்படி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது: முதற்கட்ட முத்தரப்பு பேச்சில் பங்கேற்க, 84 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு தொழிற்சங்கத்தில் இருந்தும் ஒருவர் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டது. தொ.மு.ச., - அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பெரிய தொழிற்சங்கங்களுக்கும் ஒரு நிர்வாகி; மற்ற சிறு தொழிற்சங்கத்துக்கு ஒரு நிர்வாகி என்ற ரீதியில் பேச்சில் பங்கேற்க அழைப்பதை ஏற்க முடியாது. இது, தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்வதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும். எனவே, பெரிய தொழிற்சங்கங்களில் இருந்து இரண்டு, மூன்று பேர் பங்கேற்க ஏற்பாடு வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சு சுமுகமாக நடக்க வேண்டும். ஆனால், சங்கங்களை முறைப்படுத்துவதை காரணம் காட்டி காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே, இரண்டாம் கட்ட பேச்சை விரைவில் துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'முதற்கட்ட பேச்சின் போது, தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பேசி வருகிறோம். விரைவில், அடுத்தகட்ட பேச்சு தேதி அறிவிக்கப்படும்' என்றனர்.