உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறுவை பருவ நெல் கொள்முதல் குளறுபடி தீருமா?

குறுவை பருவ நெல் கொள்முதல் குளறுபடி தீருமா?

சென்னை:'குறுவை பருவ நெல் அறுவடை துவங்கிய நிலையில், கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பை தவிர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடிக்கு, ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். நடப்பாண்டு போதிய நீர் இல்லாததால், அணை திறக்கப்படவில்லை.இதனால், நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தியது.

அறுவடை தீவிரம்

இதை பயன்படுத்தி, 4.20 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்துள்ளது.தற்போது, நெல் அறுவடை துவங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அறுவடை தீவிரம் அடையும் வாய்ப்புள்ளது. செப்., 1 முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. கொள்முதல் நிலையங்களில், நெல் விற்பனை செய்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலை, மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கொள்முதல் நிலையங்களுக்கு அருகே வைக்கப்படும் நெல் மூட்டைகள், திடீர் மழையால் சேதமடைந்து வருகின்றன. எனவே, இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக ஏரிகள் மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:நெல் கொள்முதல் நிலையங்களில், 40 கிலோ மூட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 1 ரூபாய் வீதம் கமிஷன் எடுத்துக் கொள்கின்றனர். நெல்லில் உள்ள துாசுக்களை, மின் விசிறி வாயிலாக துாற்றுகின்றனர். சன்ன ரக நெல்லை துாற்றும் போது, துாசுக்களுடன் நெல்லும் பறந்து போகிறது.

காலம் தாழ்த்துகின்றனர்

எனவே, சன்ன ரக நெல்லை துாற்றக் கூடாது. சாதாரண ரக நெல்லை மட்டுமே துாற்ற வேண்டும். கமிஷன் கொடுப்பவர்களின் நெல்லை மட்டுமே, முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்கின்றனர். மற்றவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு காலம் தாழ்த்துகின்றனர். மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை