உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருட்டு வழக்கில் நகை, பணம் மீட்காவிட்டால் பாதித்தவருக்கு 30% இழப்பீடு: ஐகோர்ட்

 திருட்டு வழக்கில் நகை, பணம் மீட்காவிட்டால் பாதித்தவருக்கு 30% இழப்பீடு: ஐகோர்ட்

மதுரை: 'நகை, பணம் திருட்டு வழக்கில், கண்டுபிடிக்க முடியாத பொருட்களில், பாதிக்கப்பட்டோருக்கு திருடு போன சொத்து மதிப்பில், 30 சதவீதத்திற்கு சமமான இழப்பீட்டு தொகையை மாநில அரசு வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வள்ளிக்கண்ணு தாக்கல் செய்த மனு:

நான் 2022ல் வெளியூர் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ​​67 சவரன் நகை, 1 லட்சத்து 57,800 ரூபாய் பணம் திருடு போனது. அழகப்பாபுரம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதுபோல் வெவ்வேறு திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த சிலரும் மனு செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

சொத்து திருட்டு குற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்தப்படும் விதம் மற்றும் பொறுப்பை திறம்பட அரசு நிறைவேற்ற தவறியதன் விளைவுகள் குறித்து, இவ்வழக்குகள் கேள்வி எழுப்புகின்றன. திருட்டு அல்லது வீடு புகுந்து கொள்ளையடித்தல் தொடர்பான புகாரை விசாரிக்க வேண்டிய அதிகாரத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. குற்றவாளியை அடையாளம் காண தவறி, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என முடித்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் நீதி பெறுவதற்கான உரிமை என்னவாகும்? அரசின் கடமை குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவது மட்டுமல்ல; இழப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதிலும் உள்ளது. நீதித்துறையின் மறு ஆய்வு அதிகாரத்தை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியும். வழக்குகளில் முன்னேற்றம் இல்லாதது அல்லது எந்த தகவலும் இல்லாமல் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். அரசு அதன் கடமையை செய்ய தவறியதை வெளிப்படுத்துகிறது. இழப்பீடு பெற மனுதாரர்களுக்கு உரிமையுள்ளது. இதுபோன்ற தோல்விகள் மீண்டும் நிகழாமல் தடுக்க கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை இந்நீதிமன்றம் பிறப்பிக்கிறது. இவ்வழக்குகள் ஒவ்வொன்றிலும், திருடுபோன சொத்து மதிப்பில், 30 சதவீதத்திற்கு சமமான இழப்பீட்டு தொகையை மனுதாரர்களுக்கு மாநில உள்துறை வழங்க வேண்டும். குற்றவாளிகள் பின்னர் அடையாளம் காணப்பட்டு சொத்து மீட்கப்பட்டால், இழப்பீடு மனுதாரர்களிடமிருந்து திரும்ப வசூலிக்கப்படும். ஐந்தாண்டுகளுக்கு மேல், 'கண்டுபிடிக்கப்பட முடியாத வழக்கு' என வகைப்படுத்தப்பட்டவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க மாநில அரசு பரிசீலிக்கலாம்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Jayaraj P K
நவ 26, 2025 13:46

30% இழப்பீடு என்பது களவு போன அன்றைய சந்தை மதிப்பிலான அல்லது இழப்பீட்டை பெறும் அன்றைய சந்தை மதிப்பிலான? தெளிவுபடுத்தவும், நன்றி


Rajasekar Jayaraman
நவ 26, 2025 10:33

இது எந்த வகையான தீர்ப்பு என்று புரியவில்லை கையாலாகாத அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறது.


R.RAMACHANDRAN
நவ 26, 2025 06:54

காவல் துறையினர் உண்மை குற்றவாளிகளை தப்பிவிக்கச் செய்து ஆதாயம் அடைவதால் இந்த தீர்ப்பால் அப்பாவிகளை சிக்கவைப்பது கூடுதலாகும் அவர்களுக்கு தண்டனை ஏதும் இல்லாததால்.


Sankar Ramu
நவ 26, 2025 05:15

அமைச்சர்கள் சம்பளத்திலிருந்து ?


அப்பாவி
நவ 26, 2025 05:09

70 பர்சண்ட்டை அமுக்க ஸ்கெட்ச் போடப்படலாம். அப்பாவி கோர்ட்.


Kasimani Baskaran
நவ 26, 2025 03:56

எல்லா வழக்குகளிலும் அப்படியே நீதித்துறை சொன்னது போல நீதியை நிலைநாட்டி குற்றவாளிகளை பிடித்து விட்டார்கள்... இந்த ஆணையும் குப்பையில் போடப்படும்.


rama adhavan
நவ 26, 2025 02:31

இழப்பீட்டை சம்பந்தப்பட்ட காவல்-ள்-துறை அலுவலர்கள் தர வேண்டும்.


தாமரை மலர்கிறது
நவ 26, 2025 01:08

இதுபோன்ற தீர்ப்புகள் கொடுப்பதற்கு முன், நாட்டில் என்ன நிலவரம் உள்ளது என்பதை அறிவது அவசியம். போதுமான போலீசார் இல்லை. கடுமையான தண்டனைகள் குற்றவாளிக்கு இல்லை. போதுமான கேமராக்கள் இல்லை. போலீசுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. முப்பது சதவீதத்தை மாநில அரசு கொடுக்க வேண்டுமெனில், தமிழகம் திவாலாகிவிடும்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி