| ADDED : ஜன 19, 2024 01:55 AM
சென்னை:'பத்திரப்பதிவுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை, பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பத்திரப்பதிவு வழிகாட்டுதல் மதிப்பை, 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தி, கடந்த ஏப்.,1 முதல் அமலுக்கு வருவதாக, தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டது.அதற்கு எதிராக கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சுற்றறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.மேலும், புதிய வழிகாட்டுதல் மதிப்பை அரசு உருவாக்கும் வரை, 2017ம் ஆண்டின் வழிகாட்டுதல் மதிப்பின்படியே, பத்திரப் பதிவுகளை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதிய பத்திரப்பதிவு வழிகாட்டுதல் மதிப்பின்படியே, தற்போதும் பத்திரப் பதிவுகள் நடக்கின்றன. இது, நீதிமன்ற அவமதிக்கும் செயல்.பத்திரப்பதிவுகள் வழியே கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, பொதுமக்களுக்கு உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.