உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அ.தி.மு.க., லெட்டர் பேடில் வெளியாகும் அறிக்கை கமலாலயத்தில் தயாராகிறது: ஸ்டாலின் விளாசல் பழனிசாமியை விளாசிய ஸ்டாலின்

 அ.தி.மு.க., லெட்டர் பேடில் வெளியாகும் அறிக்கை கமலாலயத்தில் தயாராகிறது: ஸ்டாலின் விளாசல் பழனிசாமியை விளாசிய ஸ்டாலின்

திருப்பூர்: ''வரும் தேர்தலில் வெற்றி பெற்று பெண்களுக்கான திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவோம்,'' என, பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நேற்று நடந்தது. மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது 'பவர்புல்' ஆக இருக்கிறது. 'உமன் பவரில்', தி.மு.க., மீண்டும் 'பவரு'க்கு வரப் போகிறது என்பது உறுதியாகி விட்டது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க., தேர்தல் அறிக்கை தான், 'ஹீரோ'. அந்த 'ஹீரோ'வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று தயாரித்த தேர்தல் அறிக்கை முழுமையான வெற்றியை தேடித்தந்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற இருக்கிறோம். பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு, அதை அமல்படுத்தாமல், பெயரளவில் வைத்துள்ளது; அது எப்போது அமலுக்கு வரும் என, சொல்ல முடியாது. 'ஆப்பரேஷன் சக்சஸ்; பேஷன்ட் கோமா' என்ற நிலை தான் இது. பெண்களுக்கு பார்லிமென்டில் அதிகாரம் கிடைப்பதை பா.ஜ., விரும்பவில்லை. தமிழகத்தில், 1.39 கோடி பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது; பஸ்களில் விடியல் பயண திட்டத்தின் கீழ், இதுவரை, 900 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 88 சதவீத பெண்கள் பயனடைந்தனர்; ஆனால், அந்த திட்டத்தை பா.ஜ., அரசு இழுத்து மூடிவிட்டது. திட்டத்தில், 40 நாட்கள் வேலை கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். அதற்கான நிதி சுமையையும் மாநில அரசின் மீது சுமத்தி, பல்வேறு நிபந்தனைகளை, மத்திய அரசு விதித்துள்ளது. இதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முட்டுக் கொடுத்து வருகிறார். கமலாலயத்தில் தயாராகும் அறிக்கையை, அ.தி.மு.க., லெட்டர் பேடில் வெளியிட்டு வருகிறார். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று, 'திராவிட மாடல், 2.0' திட்டத்தில் பெண்களுக்கான திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். எனவே, பெண்களுக்காக தி.மு.க., அரசு செய்யும் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சென்று சேர்க்கும் பணியை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

பா.ஜ.,வால் தொட்டுக்கூட பார்க்க முடியாது

தமிழகத்தில் பெண்களின் வளர்ச்சியை பிடிக்காத மத்திய அரசு, பல வகைகளில் தொந்தரவு கொடுக்கின்றனர். நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என மாநிலங்களுக்கான உரிமைகளை பறிக்கின்றனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சிதைத்து விட்டனர்; மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குரல் எழுப்பிய பின் தான் அடுத்தடுத்து குரல்கள் எழும்புகின்றன.பீஹார் வெற்றியை தொடர்ந்து தமிழகம் தான் என அமித் ஷா எச்சரிக்கிறார்; பயறுமுறுத்துகிறார். சுயமரியாதை நிறைந்த தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. தமிழகம் சமத்துவ பூங்கா. அமைதி, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் தான் நிலைத்து நிற்கும். அத்துமீறி நுழைந்தால் அவர்களை எப்படி விரட்டி அடிக்க வேண்டும் என முதல்வருக்கு தெரியும். வரும், 2026 தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க.,வை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.- உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,

பெண்களுக்கான ஆட்சி

மாநாட்டில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:பெண்களுக்கான ஆட்சியை வழங்கி வரும் முதல்வருக்கு நன்றி சொல்லும் விதமாகவும், அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு துணையாக நிற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தான் மகளிர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மகளிர் அணியினர் சார்பில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் நகலை புத்தக வடிவில் முதல்வருக்கு பரிசாக வழங்கியிருக்கிறோம். இந்த நாட்டின் எதிர்காலத்தை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளோம் என்பதே அதன் அர்த்தம்.இந்திய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை காப்பாற்றக்கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என்ற நம்பிக்கையை, இந்த நாடு வைத்திருக்கிறது. இந்த நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை, முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கிறது. வரும் தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கையில், மக்களின் கோரிக்கை, தேவைகள் இடம்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raj
டிச 30, 2025 13:10

திமுக லெட்டர் பேடில் வரும் அறிக்கை எங்கே தயார் ஆகுகிறது


Muralidharan S
டிச 30, 2025 12:48

மொத்த இந்தியாவும் இன்று கமலாலயம் ஆக மாறிவருவதால்தான்...நமது தேசம் உலக மதிப்பில் உயர்ந்து வருகிறது.. அது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.. திராவிஷ லெட்டர் பேடில், அறிவாலயத்தில் தயாராகும் அறிக்கையாக இருந்தால்தான் அவமானப்படவேண்டும், வெட்கப்படவேண்டும்.. கூனிக்குறுகி போகவேண்டும்...கூசவேண்டும்..


Baskar
டிச 30, 2025 12:34

தேர்தல் காலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இனைந்து செயல் படும் கட்சி , அதிமுக பாஜக சிறப்பு . அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஸ்டாலின் அவர்கள் எதிர் கட்சி போலவே தான் பேசுகிறார் , நடக்கிறார் . அவருக்காக எதிர் கட்சி தலைவர் பதவி காத்து கொண்டு இருக்கிறது


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
டிச 30, 2025 09:37

அப்ப நல்ல விஷயம்.


Raj
டிச 30, 2025 08:28

இவர்கள் கூடும் கூட்டத்தில் எல்லா பெண்களுக்கும் கருப்பு, சிவப்பு, சேலை ரவிக்கை தான். அங்கேயும் கூட அவர்களுக்கு திராவிட கலர் பூசப்படுகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை