அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு:
தமிழக அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், 2024 மே 26ல், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, முதல்வருக்கு எதிராக அவதுாறாக பேசியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். அவதுாறு வழக்கெல்லாம், எனக்கு ஒரு பொருட்டே அல்ல... வழக்குகள் எனக்கு ஜுஜுபி. ஆர்ப்பாட்டத்தில் நான் பேசியதை தான், தமிழக மக்கள் தினமும் பேசுகின்றனர் நான் பேசினால் அவதுாறு வழக்கு தொடர்கின்றனர்.டவுட் தனபாலு:
அவதுாறு வழக்கு என்பதால், ஜுஜுபி என அசால்டா பேசுறீங்க... இதே, சொத்து குவிப்பு வழக்கு என்றால், இப்படி சவால் விடுவீங்களா என்பது, 'டவுட்'தான்! பத்திரிகை செய்தி:
வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு, 24,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் நகராட்சி பெண் கமிஷனர் குமாரி உள்ளிட்ட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.டவுட் தனபாலு:
ஒரு நகராட்சியில கமிஷனர் பதவியில இருக்கிறவங்களே, ஒரு வீடு கட்ட, 24,000 ரூபாய் வசூல் செய்றாங்களே... ஒட்டுமொத்த தமிழகத்துலயும், ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் வீடுகள், கட்டடங்கள் கட்டுறாங்க... இதுக்கு மேல்மட்ட அதிகாரிகளும், அரசியல் முக்கிய புள்ளிகளும் எத்தனை கோடிகளை வசூலிப்பாங்க என்ற, 'டவுட்' வருதே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகி. கட்சி அலுவலகத்திற்குள் அடியாட்களுடன் நுழைந்து, ஆவணங்களை எடுத்ததுடன், பொருட்களையும் கொள்ளை அடித்தார்; அப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது. குழப்பத்திற்கு மேல் குழப்பம் விளைவிக்க, பன்னீர்செல்வம் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளார். குழம்பிய குட்டையில், அவரால் மீன் பிடிக்க இயலாது. அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம்.டவுட் தனபாலு:
இப்படி, உங்களுக்குள்ள அடிச்சுக்கிறதுலயே நேரத்தை கடத்திட்டு இருக்கிறதால தான், தமிழகத்துல பிரதான எதிர்க்கட்சியா, பா.ஜ., அசுர வேகத்துல வளர்ந்துட்டு இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!