தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை அன்புமணி எச்சரிக்கை
சென்னை : 'வன்னியர் இட ஒதுக்கீட்டை மறுத்து, தி.மு.க., ஆட்சிக்கு முடிவுரை எழுதி விட வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, விழுப்புரத்தில் பா.ம.க., நடத்திய போராட்டம், வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக, இட ஒதுக்கீட்டிற்காக, வன்னியர் சமுதாயம் போராடி வருகிறது. இனியும் தாங்கள் ஏமாற்றப்படுவதை தாங்கிக் கொள்ள, அவர்கள் தயாராக இல்லை. இடஒதுக்கீட்டுக்காக காத்திருக்க, அவர்கள் விரும்பவில்லை. சமூக நீதி அவர்களின் உரிமை. வன்னியர்களின் சமூக நீதியை மறுத்து, தி.மு.க., ஆட்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் முடிவுரை எழுதி விட வேண்டாம். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, வன்னியர்களின் வலிகள், வேதனைகள், உணர்வுகள் ஆகியவற்றை மதித்து, அவர்களின் உரிமையான உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.