உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுமண தம்பதிக்குள் தகராறு; கிணற்றில் குதித்து தற்கொலை

புதுமண தம்பதிக்குள் தகராறு; கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த துக்கியம்பாளையம் அருகே மாரியம்மன் புதுாரை சேர்ந்த கதிர்வேல் மகன் அருள் முருகன், 25, கொத்தனார். இவருக்கும், சந்திரபிள்ளைவலசை சேர்ந்த சந்தோஷ் மகள் அபிராமி, 19, என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த அபிராமி, அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் அருள் முருகனும் பாய்ந்து சென்று, மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். வாழப்பாடி போலீசார், இருவர் உடலையும் மீட்டனர். அபிராமி தாய் மாயா அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு, திருமணமாகி இரு மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

மனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைது

விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தரும ராஜா, 33; இவரது மனைவி கல்பனா, 29; திருமணமாகி 11 ஆண்டாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தருமராஜா வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் இவர்களுக்குள் தக ராறு ஏற்பட்டது. அப்போது, தர்மராஜா வீட்டில் இருந்த சூடான சாம் பாரை கல்பனா மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த கல்பனா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, தருமராஜாவை கைது செய்தனர்.

நெல்லையில் இளைஞர் கொலை

துாத்துக்குடி மாவட்டம், புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துபெருமாள். கார் ேஷாரூமில் விற்பனையாளர். கடந்த 31ம் தேதி, அவர் வீட்டிலிருந்து கடை வீதிக்கு பைக்கில் சென்றார். சிவந்திப்பட்டி, ஜான்சன் நகர் அருகே சென்ற போது, அவரை துரத்தி வந்த ஒரு கும்பல் அந்த இடத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. அவர்களைப் பிடிக்க முயன்றவர்களையும், மிரட்டி தப்பியது.இந்த கொலை குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்ட நபர்களில் ஒருவரான, ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒய்க்காட்டான், 23, என்பவர் நேற்று காலை, திருப்பூர், ஜே.எம். எண்: 2 கோர்ட்டில் சரணடைந்தார். சரணடைந்த அந்நபரை, நீதிபதி பழனி குமார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் அவரை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

அசைவம், கேக் அதிகமாக சாப்பிட்ட வாலிபர் பலி

சேலம், தாதகாப்பட்டி புருேஷாத்தமன் மகன் நந்தகுமார், 23. இவர் விபத்தில் சிக்கியதால், வயிற்று பகுதியில் ஆப்பரேஷன் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம், ஆங்கில புத்தாண்டு அன்று, வீட்டில் ஆட்டுக்கறி, பிராய்லர் கோழிக்கறி சமைத்துள்ளனர். அதை அதிகளவில் சாப்பிட்டார். அத்துடன் கேக்கும் சாப்பிட்டு, இரவு, 9:00 மணிக்கு படுக்கை அறைக்கு சென்றார். மீதமிருந்த கேக்கையும் படுத்துக் கொண்டே சாப்பிட்டவர் துாங்கி விட்டார். நள்ளிரவு, 12:30 மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி கைது

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவர் மனைவி அறிவழகி, 31. இருவரும், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில், இ - சேவை மையம் நடத்தி வருகின்றனர். அங்கு வருபவர்களிடம், 'எங்களுக்கு அரசு உயரதிகாரிகள் பலரை தெரியும். அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருகிறோம்' என, ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணம் பெற்றனர். இதை நம்பி, காவேரிப்பாக்கம் உப்புமேட்டு காலனியை சேர்ந்த சங்கீதா, 28, என்பவர், 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.கடந்த இரு நாட்களுக்கு முன், இ - சேவை மையத்திற்கு சங்கீதா சென்றபோது, அங்கு ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த பலர், செந்தில்குமார் மற்றும் அறிவழகியிடம், பணத்தை திரும்ப கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது சங்கீதா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து, 4.58 லட்சம் ரூபாய், 9 சவரன் நகை மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாணவியருக்கு 'தொல்லை': தாளாளர், வார்டனுக்கு சிறை

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன், 50, முத்தனம்பட்டியில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லுாரி தாளாளர். இக்கல்லுாரியில் தங்கி படிக்கும் மாணவியருக்காக விடுதியும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2021ல் விடுதி மாணவியருக்கு ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு விடுதி வார்டனாக இருந்த கர்நாடகாவை சேர்ந்த அர்ச்சனா, 26, என்பவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இருவரையும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, வழக்கை விசாரித்தார். குற்றவாளிகளான ஜோதிமுருகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 75,000 ரூபாய் அபராதம், அர்ச்சனாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

வேலை கேட்டு வந்த உ.பி., சிறுமி; அத்துமீறிய இளைஞர்கள் கைது

உ.பி., மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, வேலை தேடி, கடந்த, 31ம் தேதி காலை திருப்பூர் வந்தார். ரயில்வே ஸ்டேஷன் வெளியே நின்றிருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார், 21, என்பவர், தான் வேலை செய்யும் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாக கூறி, சிறுமியை, காங்கேயம் அழைத்து சென்றார். அவருடன் தங்கியிருந்த நிதீஷ்குமார் யாதவ், 23, என்பவருடன் ரூபேஷ்குமார் பேசி, தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே, சிறுமியை தங்க வைத்தனர்.அன்றிரவு, 10:00 மணிக்கு, புத்தாண்டை கொண்டாட இருவரும் சிறுமியை வற்புறுத்தினர். அவர் மறுக்கவே, சிறுமிக்கு தெரியாமல், பழச்சாறில் மதுவை கலந்து குடிக்க வைத்து, இருவரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். சிறுமி கூச்சலிடவே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், நிதிஷ்குமார் யாதவ், ரூபேஷ்குமார் ஆகியோர் மீது, 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 03, 2024 08:56

புது ஆங்கில வருடம் பிறந்த முதல் நாளிலிருந்தே அதிகம் குற்றங்கள் தமிழகத்தில். நல்லாதான் விடிஞ்சது விடியல் அரசு போங்க...


Kanns
ஜன 03, 2024 08:55

Sack & Hang All Case Hungry Criminals Not Punishing Vested False Complainant Gangsters


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை