புதுக்கோட்டை: ''தமிழகத்தில், தேர்தல் நெருக்கத்தில் பெண்களுக்கு தி.மு.க., அரசு, பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,'' என கார்த்தி எம்.பி., கூறினார். புதுக்கோட்டையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி அளித்த பேட்டி: பீஹாரில் ஓட்டு திருட்டு நடந்தது என கூறுகின்றனர். அப்படி நடந்ததற்கான தரவுகள் எதுவும் என்னிடம் கிடையாது. பீஹாரில், தே.ஜ., கூட்டணி வலுவான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு, மாநிலத்தை ஆளும் அக்கூட்டணியினர், கடைசி கட்டத்தில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினர். இதுதான், பீஹாரில் காங்., கூட்டணி பின்னடைவுக்குக் காரணம். பீஹாரைப் போன்று தமிழகத்திலும், தி.மு.க., அரசு, தேர்தல் நெருக்கத்தில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பீஹார் தேர்தல் முடிவு, காங்கிரசுக்கு பின்னடைவு தான்; மறுப்பதற்கில்லை. அதேவேளையில், தமிழகத்தில் அந்த முடிவால் பாதிப்பு இருக்காது. காங்கிரஸ் பிரச்னைகளை தலைமையில் இருப்போர் தான் சரி செய்ய வேண்டும். என்னால் அதற்கான மருந்தை கொடுக்க முடியும். ஆனால், நான் கொடுக்கும் மருந்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என் தந்தை ப.சிதம்பரத்துக்கு காங்., தலைவர் பதவியை கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால், நல்ல தீர்வு ஏற்படுத்த முடியும். ஜனநாயக நாட்டில் எஸ்.ஐ.ஆர்., என்பது தேவையான ஒன்று. அனைவரும் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அப்போதுதான், ஓட்டு போடும் உரிமையை தக்க வைக்க முடியும். வரும் 2026 சட்டசபை தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இவ்வாறு கார்த்தி கூறினார்.