அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
காவிரி குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை, காங்கிரஸ் தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாத போக்கும், தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகம் மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
அவர் நம்ம கவர்னர் மாதிரி இல்லையோ... அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை அப்படியே படிச்சிட்டார் போல!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை அறிக்கை:
கர்நாடகா அரசு கொரோனா சமயத்தில் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையையும், தற்போது அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தையும் நிறைவேற்றி உள்ளது. அதுபோல, தமிழக அரசும், தன் ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தையும், அரசு மருத்துவர்களுக்கு ஊதிய கோரிக்கையையும் நிறைவேற்றி தர வேண்டும்.
கர்நாடகாவில் காங்., அரசால் இப்படி எல்லாம் புதுப்புது இம்சையா வரும்னு தமிழக அரசு நினைத்து கூட பார்த்திருக்காது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு:
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. இத்தொகுதி எம்.பி., திருமாவளவன் ஜாதி அரசியல் மட்டுமே செய்கிறார். பட்டியலின பெண்ணை தி.மு.க. - எம்.எல்.ஏ. குடும்பத்தினர் கொடுமைப்படுத்திய விவகாரம் பற்றி எந்த அறிக்கையும் அவர் வெளியிடவில்லை. மோடியை திட்டுவதை முழு நேர வேலையாக வைத்துள்ளார்.
மோடியை முழு நேரமும் திட்டினால் தானே அவர் தி.மு.க., கூட்டணியில் மீண்டும் சீட் வாங்க முடியும்!
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் பேச்சு:
வரும் 2047ம் ஆண்டில், முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க, பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை, எளிய மக்கள் பயனடைவதோடு, இந்தியாவின் கட்டமைப்புகள் உலகத்தரத்துக்கு உருவாக்கப்பட்டு வருகின்றன.
உண்மை தான்... அதே நேரத்துல திராவிட கட்சிகள் மேல இருக்கிற கோபத்துல தமிழகத்திற்கு எந்த ஓர வஞ்சனையும் செய்யாமல், திட்டங்களை அள்ளி கொடுத்தால் நல்லா இருக்கும்!