| ADDED : நவ 23, 2025 01:46 AM
சென்னை: முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக, வரும் 25ம் தேதி கோவை செல்கிறார். அன்று காலை கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மாலை, தொழில்துறை சார்பில் நடத்தப்படும், மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன. மறுநாள் 26ம் தேதி காலை, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைக்கிறார். பின்னர் தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்த உள்ளார். ஈரோடு, சோலார் புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில், 605 கோடி ரூபாயில் முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்க உள்ளார். மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், பால்வளத் தந்தை பரமசிவன் சிலையை திறந்து வைக்க உள்ளார்.