மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்குவதில் தொய்வு; விவசாயிகள் ஏமாற்றம்
26-Jul-2025
சென்னை:''கட்டுமான பணிகளின் போது விபத்து ஏற்பட்டால், மரணமடைந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு, 48 மணி நேரத்திற்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தமிழக பிரிவு சார்பில், தொழில்வழி சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. விழாவில், மாநிலம் முழுதும் தேர்வு செய்யப்பட்ட 101 தொழிற்சாலைகள் மற்றும் 37 தொழிலாளர்களுக்கு, சான்றிதழ் மற்றும் விருதை, அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், அரசு செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை, நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். அதேபோல, கட்டுமான பணியின் போது விபத்து ஏற்பட்டால், 48 மணி நேரத்திற்குள், மரணமடைந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், இந்திய தேசிய பாதுகாப்பு குழுமத்தின் பொது இயக்குநர் டாக்டர் லலித், ஆர்.கபானே, தேசிய பாதுகாப்பு குழுமத் தலைவர் செ.ஆனந்த், துணைத் தலைவர் டாக்டர் த.பாஸ்கரன், செயலர் டாக்டர் ப.ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Jul-2025