| ADDED : டிச 03, 2025 07:09 AM
சென்னை: கன மழையால், கடந்த மாதம் ரேஷன் கடைகளில், 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட கார்டு தாரர்கள் உணவு பொருட்களை வாங்கவில்லை. அவர்களுக்கு இம்மாதம் பொருட்களை சேர்த்து வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், ஒரு மாதம் பொருட்களை வாங்கவில்லை எனில், அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படாது. கடந்த அக்டோபர் இறுதியில், வட கிழக்கு பருவ மழை துவங்கியது. நவம்பர் இறுதியில், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல மாவட்டங்களில், மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், ரேஷன் பொருட்களை வாங்கவில்லை. கடந்த மாதம் ரேஷன் பொருட்களை வாங்காதவர்களுக்கு, இம்மாதம் சேர்த்து வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவம்பரில் மாவட்ட வாரியாக, எத்தனை கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கவில்லை என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 20 சதவீதம் பேர் பொருட்களை வாங்கவில்லை என தெரிகிறது. எனவே, கடந்த மாதம் ரேஷன் பொருட்களை வாங்காதவர்களுக்கு, இம்மாத பொருட்களுடன் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.