சென்னை: 'தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், 100 பழைய பஸ்களை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களில் இருந்து, தினமும் 1,080க்கும் மேற்பட்ட, டீலக்ஸ், 'ஏசி' வசதியுள்ள விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். அடுத்த ஒரு மாதத்தில், 20 வால்வோ பஸ்கள் உட்பட, 240 புதிய பஸ்கள், புதிதாக இணைக்கப்பட உள்ளன. இதற்கிடையே, தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களில், மிகவும் பழமையான பஸ்களை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயார் செய்யப் படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.