உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மகிழ்ச்சிக்கு அடிப்படை தர்மம்; துன்பத்துக்கு அடிப்படை அதர்மம்: சிருங்கேரி ஜகத்குரு அருளுரை 

 மகிழ்ச்சிக்கு அடிப்படை தர்மம்; துன்பத்துக்கு அடிப்படை அதர்மம்: சிருங்கேரி ஜகத்குரு அருளுரை 

டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், 'இந்தியா ஹேபிடட்' வளாகத்தில் பக்தர்கள் மத்தியில் அருளுரை வழங்கினார். சிருங்கேரி ஜகத்குருவின் அருளுரை: ஒரு காலத்தில், நம் நாட்டின் ஒரு மாமனிதர் சமுதாயத்தை சீர்திருத்த விரும்பினார். இதற்காக அவர் பல மன்னர்கள், நிர்வாகிகள், அறிஞர்கள் என பலரை அணுகியும் பலனில்லை. இறுதியில் குடிமக்களிடம் பேசினார். அவர்களும், தர்மத்தைப் புரிந்துகொண்டாலும், வேலைக்குச் செல்ல வேண்டிய கடமை காரணமாக பாதியிலேயே சென்றனர். அதன் பின், அவர் தான் சொல்ல வந்த அனைத்தையும் நுால்களாக எழுதினார். அவர் தான், பர்த்ருஹரி என்னும் அறிஞர். அவர் நீதி சதகம், சிருங்கார சதகம் மற்றும் வைராக்கிய சதகம் ஆகிய சதகங்களை எழுதினார். சமுதாயத்துக்கு அறிவுரை வழங்கக்கூடிய அறிஞர்களும், அந்த ஞானத்தைக் கேட்டுச் செயல்படுபவர்களும் அரிதானவர்கள். இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது; வசதி, வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதே சமயம் துன்பங்கள் இன்னும் நீடிக்கின்றன; மகிழ்ச்சியாக இருப்போர் இப்போதும் இருக்கின்றனர். மகிழ்ச்சிக்கும் துன்பத்துக்கும் அடிப்படை, தர்மம் மற்றும் அதர்மம் தான். மகி ழ்ச்சியும் துன்பமும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை அல்ல. அவை தர்மம் மற்றும் அதர்மத்துடன் இணைந்தவை. நிரந்தரமான மகிழ்ச்சியை விரும்புவதும், துன்பத்தைத் தவிர்க்க விரும்புவதும் அனைவருக்கும் பொதுவானது. நாம் விரும்பினாலும், ஒவ்வொருவரும் ஏதோவொரு வடிவத்தில் துன்பத்தை அனுபவிக்கிறோம். கடோபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த உலகமே உண்மை என்று நம்பி, மோகத்தில் மூழ்கியவன் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் சம்சாரச் சுழற்சியில் வருகிறான் என்று எமன், நசிகேதனுக்கு உபதேசித்தார். அத்வைதமும் ஸ்வதர்மமும் இன்று நம் தர்மத்தின் பாரம்பரியத்தில் உள்ளவர்கள் கூட, வசுதைவ குடும்பகம், ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து, லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து, போன்ற அடிப்படை கொள்கைகளை அறியாத ஒரு நிலையில் உள்ளோம். இறுதியில், ஒரே சைதன்யம்தான் ஒவ் வொரு உயிரிலும் ஊடுருவி இருக்கிறது எனும், அத்வைத தத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்; இந்த உபநிடத போதனையை 12 நுாற்றாண்டுக்கு முன் அவதரித்த ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் விளக்கினார். பகவத் கீதை, இந்த அறிவைப் பற்றி குறிப்பிடும்போது, அதனை அறிந்த பின், வேறு எதுவும் அறியப்பட வேண்டியதில்லை என்று கூறுகிறது. அர்ஜுனன் ராஜ்யத்தை வேண்டாம் எனும்போது, பகவான் அது ஸ்வ-தர்மம் (தனது கடமை) என்று சுட்டிக்காட்டினார். ஆகவே, ஸ்வதர்மம் எனப்படும் அவரவர் தர்மத்தினை பின்பற்றுவதே மோட்சத்தின் மிக உயர்ந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கான முதல் படியாகும். 'தர்மத்தின் பாரம்பரியத்தில் சிறப்பு முயற்சிகள் மூலமாக மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய அம்சங்கள் உள்ளன' என்பதை மக்கள் அறிய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இப்போதும் இதையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும் முக்கிய நபர்கள் இங்கே இருக்கிறீர்கள். இது பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் இன்னும் அதிகமாகப் பாடுபட வேண்டும். அன்னை ஸ்ரீ சாரதாம்பாள் உங்களுக்கு அந்த பலத்தை வழங்க வேண்டும் என ஆசீர்வதிக்கிறேன். இவ்வாறு சுவாமிகள் உரை நிகழ்த்தினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை