மதுரை:''தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும்; பொறுத்திருந்து பாருங்கள்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது:தேர்தல் அறிவித்த பிறகு தான், எங்கள் தலைமையில் கூட்டணி அமைவது குறித்து முடிவாகும். தி.மு.க., கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அந்த கூட்டணியிலிருந்து எந்தெந்த கட்சிகள் வெளியேறுகின்றன என பொறுத்திருந்து பாருங்கள்.வரும் லோக்சபா தேர்தலுக்கு, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தான் தேர்தலைசந்தித்தார். பிரதமரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும்போது, தேர்தலுக்குப் பின், மாநிலத்திற்கு எதிரான பிரச்னைகள் வரும்போது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது.அதனால் தான் அ.தி.மு.க., சுயமாக முடிவெடுத்து, இப்போது தேர்தலை சந்திக்கிறது.இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த பின் எப்படி முடக்க முடியும்? பன்னீர்செல்வம் ஆசை நிராசையாகத் தான் முடியும்.நடிகை த்ரிஷா குறித்து விமர்சித்த ஏ.வி.ராஜு, அ.தி.மு.க.,வில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார்.அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இனி, அது குறித்து பேச வேண்டாம். மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்ற அவதுாறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால், தற்போதைய தி.மு.க., அரசை அதைப்போல செய்யச் சொல்லுங்கள். மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகத்துக்கு துரோகம் செய்தது, தி.மு.க., அரசு தான். இனிமேலும் தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது. இவ்வாறு கூறினார்.தி.மு.க., கூட்டணியில் பிளவா?கூட்டணியில் இருந்து பா.ஜ.,வை அ.தி.மு.க., கைவிட்ட நிலையில், பலமான கூட்டணி அமைக்க பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர த.மா.கா., விரும்புகிறது. கூட்டணி அமைக்க தே.மு.தி.க., காத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க.,வும் முயற்சித்து வருகிறது.இக்கட்சிகள் தவிர, சிறிய கட்சிகள் தான் அ.தி.மு.க., பக்கம் உள்ளன. இதனால் ஓட்டு சதவீதமும், வெற்றி வாய்ப்பும் குறையும் எனக் கருதி, த.மா.கா., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசி வருகின்றனர். அதேசமயம் தி.மு.க., கூட்டணியில் 'சீட்' ஒதுக்கீட்டில் முரண்பாடு ஏற்படும்பட்சத்தில், காங்கிரஸ், வி.சி., உள்ளிட்ட சில கட்சிகள் அ.தி.மு.க., பக்கம் வர வாய்ப்புள்ளது என பழனிசாமி கருதுகிறார்.அதனால் தான், அவர் தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறும் என அடித்துக் கூறுவதோடு, அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்யாமல் காத்திருக்கிறார் என, அ.தி.மு.க., தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.