நெல்லையப்பர் கோவிலுக்கு உத்தரகண்டிலிருந்து யானையா? அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: 'திருநெல்வேலி நெல்லை யப்பர் கோவிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையை அழைத்து வர, தடை கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்த, 55 வயதான பெண் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து, இந்த கோவிலுக்கு, உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து, 5 வயது குட்டி யானையை அழைத்து வர, அறநிலையத்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளன. உத்தரகண்ட் வனத்துறை சரணாலயத்தில் பராமரிக்கப்படும் குட்டி யானை, தாயிடம் இருந்தும், அதன் கூட்டத்தில் இருந்தும் பிரித்து, கொண்டு வரப்பட உள்ளது. 'யானைகள் வைத்துக்கொள்ள தனி நபர்களுக்கும், கோவில்களுக்கும் உரிமம் வழங்கக்கூடாது' என, உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. எனவே, உத்தரகண்டில் இருந்து குட்டி யானையை அழைத்து வர தடை விதிக்க வேண்டும். கோவில் விழாக்களுக்கு இயந்திர யானைகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து குட்டி யானையை அழைத்து வரும் முடிவை கைவிட கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்துக்கு பின், தலைமை நீதிபதி, ''தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது மகிழ்ச்சி அளிக் கிறது. இது, குறிப்பிடத்தக்க வளர்ச் சிக்கு சமம். இருப்பினும், நாட்டின் பிற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை,'' என, வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.