- நமது நிருபர் -செங்கோட்டையனை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும், த.வெ.க.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., இருவரும் சேர உள்ளதாக கூறப்படுகிறது.விஜய் முன்னிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்தார். அவருக்கு, கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது. அவரை தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வில் அரசியல் பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத், த.வெ.க.,வில் இணைந்தார். அவருக்கு பிரசார செயலர் பதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கட்சி தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஏற்கனவே செங்கோட்டையன், 'இம்மாதத்திற்குள் த.வெ.க., கூட்டணி மேலும் வலுப்பெறும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களில் யார் யார் சேருகின்றனர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்' என கூறியுள்ளார். டிச. 16ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கான கூட்டத்திற்கு, போலீசில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில், விஜய் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மாவட்ட செயலர்கள் என, 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை, த.வெ.க.,வில் சேர்க்க செங்கோட்டையன் ஏற்பாடு செய்துள்ளார். கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில் பெங்களூருவில் செங்கோட்டையனும், த.வெ.க., பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனாவும் சந்தித்து பேசினர். அப்போது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜவர்மன், தமிழரசன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் அசோகன் மற்றும் திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டச் செயலர்கள் உட்பட, 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. த.வெ.க.,வில் இணைய விரும்பும் அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் சிலர், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், மாவட்டச் செயலர் போன்ற முக்கிய பதவிகளை தர வேண்டும் என, சில நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதில், ஏற்கனவே பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து, அ.தி.மு.க.,வுக்கு வந்த 'மாஜி'க்கு மாநில பொறுப்பு வழங்க, த.வெ.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.