சென்னை: சென்னையில் ஜூன் மாதத்துக்கு பின், 'பார்முலா 4' கார் பந்தயம் நடத்தப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.கடந்த டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில், சென்னையில், 'பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்' மற்றும் 'இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்ட்ரீட்' கார் பந்தயம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.தமிழக அரசுடன் இணைந்து, 'ரேசிங் புரமோஷன்' நிறுவனம், இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.சென்னைக்குள் கார் பந்தயம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் ஸ்ரீ ஹரிஷ், லுாயிஸ்ராஜ், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பாலுசாமி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான மதுரைவீரன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, கார் பந்தயத்தை தள்ளி வைப்பதாக, தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில், வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிந்தன. இந்நிலையில், இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. கார் பந்தயம் நடத்துவது குறித்து, அரசின் நிலை பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''புயல், மழை காரணமாக, கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டது; ஜூன் மாதத்துக்கு பின் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.இதையடுத்து, இந்த வழக்கின் உத்தரவை, வரும் 16ம் தேதி பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.