''நமக்கு அடுத்து வரும் 15 மாதங்கள், 'கோல்டன் பீரியட்' மாதிரி. எனவே, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். பொதுமக்கள் முன்வைக்கிற கோரிக்கைகளை கேட்டு, உங்களால் முடிந்த வரை நிறைவேற்றி கொடுங்கள்,'' என, கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.விழுப்புரம் மாவட்ட தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில் உதயநிதி பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும், வெற்றியை மட்டுமே தி.மு.க., பெற்று வருகிறது. அடுத்து வர இருக்கும் 2026 சட்டசபை தேர்தல், மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது. அந்த முடிவுகள் வரும் நாளிலும், முதல் இயக்கமாக தி.மு.க., தான் இருக்க வேண்டும். கட்சியில் 23 சார்பு அணிகள் உள்ளன. அந்த காலத்தில் போருக்கு செல்கின்றனர் என்றால், கும்பலாக, கூட்டமாக செல்பவர்களை விட, திட்டமிட்டு அணி அணியாக செல்வோர்தான் வெற்றி பெறுவர். அதுபோல் நாமும் அணி அணியாக திட்டமிட்டு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து செய்தால், 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை, நிச்சயம் அடைய முடியும்.களப்பணிதான் உங்களை மெருகேற்றும்; வெளி உலகுக்கு காட்டும். உங்கள் ஒவ்வொருவராலும் 500 ஓட்டுகளை திரட்ட முடியும் என்ற சூழல் வந்து விட்டால், உங்களை யாராலும் தவிர்க்க முடியாது; அசைக்க முடியாது. அதற்கான செயல் திட்டத்தை வகுத்து கொள்ளுங்கள். கடமையை மட்டும் செய்து கொண்டே இருங்கள். தக்க நேரத்தில் உங்களுக்கான அங்கீகாரம் வந்து சேரும்.நம்முடைய நோக்கம், 2026 தேர்தலாக இருக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை, ஆலோசனைகளை மேற்கொள்ளுங்கள். வாக்காளர்களை சந்திக்கும் செயல் திட்டங்களை உருவாக்குங்கள். ஒருவருக்கு நான்கு அல்லது ஐந்து தெருக்கள் மட்டுமே வரும். அங்கு சிறு சிறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துங்கள். அந்த தெருவில் உள்ளவர்களை, கட்சியில் சேருங்கள். மாலை நேரங்களிலும், வார இறுதியிலும், ஒவ்வொரு வீட்டிலும், 'நோட்டீஸ்' கொடுத்து, மக்களோடு மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் கூர்ந்து கேளுங்கள். அரசுக்கும், கட்சித் தலைமைக்கும் சொல்ல வேண்டியதை விரைந்து சொல்லுங்கள். தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை ஒவ்வொருவரிடமும் தெரிவியுங்கள். தேர்தலுக்கு முன்பாக, ஒவ்வொரு வாக்காளரையும், கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரும் நான்கைந்து முறை சந்தித்திருக்க வேண்டும். அந்த இலக்கை நிறைவேற்றினால் போதும். அடுத்து வருகிற 15 மாதங்கள், நமக்கு 'கோல்டன் பீரியடு' மாதிரி. எனவே, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். பொதுமக்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை கேட்டு, அதை உங்களால் முடிந்த வரை நிறைவேற்றி கொடுங்கள். இல்லையெனில், எம்.எல்.ஏ., - எம்.பி., மாவட்ட அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதை நிறைவேற்றி தரும் பணியில் ஈடுபடுங்கள்.களத்தில் 'ஆக்டிவ்' ஆக இருப்பதுபோல், சமூக வலைதளங்களிலும் இருக்க வேண்டும். 'வாட்ஸாப் குரூப்' துவக்கி, அதில் உங்கள் பகுதி மக்களை உறுப்பினராக சேருங்கள். அதன் வழியே தகவல்களை கொண்டு சேருங்கள். ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக செயல்பட வேண்டும். வரும் சட்டசபை தேர்தல் வெற்றி, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பால் கிடைத்த சாதனை வெற்றியாக இருக்கட்டும்.இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -