சென்னை:'தேவையின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கக் கூடாது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, தற்போது விசாரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக குண்டர் தடுப்பு சட்டத்தை, அரசு பிரயோகிப்பதாக, இந்த அமர்வு சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கும் உத்தரவை எதிர்த்த ஒரு வழக்கு, இந்த அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் கருத்தையும் நீதிபதிகள் கோரினர்.இதையடுத்து, பிற்பகலில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, நீதிபதிகள் முன் ஆஜரானார். இடைக்கால ஜாமின் வழங்க, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், வழக்கை பொறுத்து இது மாறுபடும் எனவும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். தண்டனை கைதி என்றால், பரோல் வழங்க, அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:தேவையின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கக் கூடாது. குறிப்பிட்ட எல்லைக்குள் சம்பந்தப்பட்ட நபர் இருக்கும்படி கட்டுப்படுத்தலாம். அதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வழக்கு இருந்தால் கூட, அவருக்கு எதிராக குண்டர் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது; தேவையின்றி கைது செய்யப்படுபவருக்கு, இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா.இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதைத்தொடர்ந்து, தேவையின்றி, இந்தச் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என, டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதனால், தற்போது கைது எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.'அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு பிலிம்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், சிலர் அதை நிறைவேற்றவில்லை. போலீஸ் நிலையங்களுக்கு செல்ல, மக்கள் அச்சப்படுகின்றனர்; புகார் அளிக்க வருபவர்களிடம் போலீசார் முறையாக நடந்து கொள்ள வேண்டும்; மரியாதையுடன் நடத்த வேண்டும். போலீஸ் துறையில் சீர்திருத்தம் வேண்டும்' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.