சென்னை: 'பழனி, திருச்செந்துார் போன்ற பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கையின் முழு விபரங்களை, இரண்டு வாரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, அறநிலையத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் வருடாந்திர வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, ஹிந்து அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர், 2023ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, 'தமிழகத்தில், 9,525 கோவில்களின் கணக்குகள், தணிக்கை செய்ய தாக்கல் செய்யப்படாதது ஏன் என ஆய்வு செய்து, விரிவான அறிக்கை அளிக்க வேண்டும். 'பழனி, திருச்செந்துார் போன்ற பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கை அறிக்கை விபரங்களை இணையதளத்தில், அறநிலையத்துறை ஆணையர் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவுபடி, 48 பெரிய கோவில்களின் 2023ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. மேலும், 1,036 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, அந்தந்த கோவில் இணையதங்களில் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேலும், 541 கோவில்களின் கணக்கு தணிக்கை விபரங்களின் சுருக்கம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க, அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார். மனுதாரர் தரப்பில் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அறநிலையத் துறை நிறைவேற்றவில்லை. திருவண்ணாமலை போன்ற கோவில்கள் சார்ந்த வழக்குகளின் உத்தரவையும், இதுபோல நிறைவேற்றவில்லை. சுருக்கத்தை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். கணக்கு தணிக்கை முழு விபரங்களை பதிவேற்றினால், கோவில்களின் வரவு, செலவு போன்றவற்றில் நடந்த முறைகேடுகள், தவறுகள் வெளிப்பட்டு விடும் என அஞ்சுகின்றனர். வழக்கில், நிதித்துறை தணிக்கை இயக்குநர், இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த செயல், நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான போக்கு. இதை அனுமதிக்கக் கூடாது,'' என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
முந்தைய உத்தரவில், பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கை முழு விபரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தோம். ஆனால், 'சட்டப்படி தணிக்கையின் சுருக்கத்தை பதிவேற்றம் செய்து உள்ளோம்' என, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு புதிய விளக்கம் தர, அறிநிலையத் துறை முனைகிறது; அது ஏற்புடையதல்ல. எனவே, முந்தைய உத்தரவின்படி, பழனி, திருச்செந்துார் போன்ற பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கையின் முழு விபரங்களையும், இரண்டு வாரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அடுத்த விசாரணையின்போது, அறநிலையத்துறை ஆணையர், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.