உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சருக்கு தெரியாது என்றால் அந்த முடிவை எடுத்தது யார்?

அமைச்சருக்கு தெரியாது என்றால் அந்த முடிவை எடுத்தது யார்?

சென்னை:'ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து, அமைச்சருக்கு தெரியாது என்றால், முடிவெடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள, 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து, தனக்கு தெரியாது என, அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது, கவலை அளிக்கும் உண்மை. பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், சமீபத்தில் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் பணியாற்ற, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து, நேற்று முன்தினம் நான் அறிக்கை வெளியிட்டேன். அடுத்த சிறிது நேரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ், 'இது குறித்து எனக்கு தெரியாது. விசாரித்து சொல்கிறேன்' எனக் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கடந்த 7ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது அமைச்சருக்கே தெரியவில்லை என்பதை ஏற்க முடியவில்லை. இது, இரு துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே, அமைச்சர் நிலையில் விவாதித்து, முடிவு எடுக்கப்படாமல், ஆசிரியர்களை இன்னொரு துறைக்கு அனுப்புவது சாத்தியம் இல்லை. அமைச்சருக்கே தெரியாமல், துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்புகிறார் என்றால், அந்த முடிவை எடுத்தவர் யார்? இதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது, அரசின் கடமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது வழக்கமானதுதான்!

பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து, விடுதி காப்பாளர்கள் சிலர் கூறியதாவது:பொதுவாக, பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதி அடிப்படையில் தான், காப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு, இடைநிலை ஆசிரியர் தகுதி; ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதிக்கு, பட்டதாரி ஆசிரியர் தகுதி உள்ளோர், காப்பாளராக நியமிக்கப்படுகின்றனர்.பொதுவாக பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத் துறை சார்ந்த விடுதிகளில், அந்தந்த துறைகளே ஆள்தேர்வு செய்து, காலியிடங்களை நிரப்பும். தி.மு.க., அரசு அமைந்ததில் இருந்து, இதுபோல் மாற்றுப்பணியில் அமர்த்தி, நிலைமையை சமாளித்து வருகின்றனர். தற்போது, விருப்பமுள்ளோர் காப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால், வயதான ஆசிரியர்கள், இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்புண்டு. அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வித் துறைக்கே அழைத்தாலும் சென்று விட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.தற்போது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை, மாற்றுப்பணியாக காப்பாளராக்கினால், அரசுக்கு நிதியும் மிச்சமாகும்; பள்ளி ஆசிரியர் பணியிடங்களும் குறையாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !