சென்னை:நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற மூன்று பேரிடம் இருந்து, 3.99 கோடி ரூபாயை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் நெல்லையில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, திருநெல்வேலி நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் நபர்கள் பணம் எடுத்து செல்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4v4dzi9z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, தாம்பரம் ரயில் நிலையத்தில், அதிகாரி பாலமணி தலைமையிலான பறக்கும் படையினர், ரயிலில் சோதனை நடத்தினர்.அப்போது, ரயிலில் பயணம் செய்த சென்னை திரு.வி.க., நகரைச் சேர்ந்த சதீஷ், 33; அவரது தம்பி நவீன், 31; துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்பகுதியைச் சேர்ந்த பெருமாள், 25, ஆகியோர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டனர்.உடனடியாக மூன்று பேரையும் ரயிலிலிருந்து இறக்கி, பணத்துடன் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு, தாம்பரம் துணை போலீஸ் கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்; அவர்களிடம் இருந்த 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருநெல்வேலி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான, கீழ்ப்பாக்கம், 'புளூ டைமண்ட்' ஹோட்டலில் இருந்தும், அவரது உறவினருக்கு சொந்தமான சேப்பாக்கம் பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்தும், தேர்தல் செலவுக்கு பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது.பிடிபட்ட சதீஷ், நவீன் ஆகியோர் சகோதரர்கள்;இருவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் வேலை செய்து வருகின்றனர்.ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பின், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.பணத்துடன் பிடிபட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி வர்ஷா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற ஜாமினில் செல்ல அனுமதிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, சென்னை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புளூ டைமண்ட் ஹோட்டலில் நேற்று சோதனை செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து, சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சாலிகிராமத்தில் உள்ள முருகன் என்பவர் வீட்டிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நெல்லையில்...
திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீடுகளில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். மேலப்பாளையம், குறிச்சியில் உள்ள கணேஷ் மணி, 66, என்பவரது வீட்டில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேட்டி, சேலைகள், நைட்டிகள்; 25க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள்; பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை தன் உறவினர் திருமணத்திற்கு வாங்கி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் நயினார் நாகேந்திரன் ஹோட்டலை, குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் குணசேகரனின், கே.டி.சி., நகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மணி என்பவர் வீட்டில், 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இதற்கிடையில், தாம்பரத்தில் மூன்று பேரிடம் இருந்து, 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விபரம், வருமான வரித்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினர், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தால், அனைத்து விபரங்களும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில், அவர்கள் விரிவான விசாரணை மேற்கொள்வர். அதேபோல, இச்சம்பவம் குறித்தும் விசாரணை நடத்துவர் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.நயினார் நாகேந்திரன் மறுப்பு
நயினார் நாகேந்திரனுக்காக எடுத்து செல்லப்பட்ட பணம் என தகவல் வெளியான நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். திருநெல்வேலி ராதாபுரம் பகுதியில் நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:எனக்கும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் எடுத்ததாக தகவல் இல்லை. திருநெல்வேலியில் பா.ஜ., வெற்றி பெறும் என்பதால், பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க., அரசு, என்னை 'டார்கெட்' செய்கிறது. தேர்தல் நேரத்தில் திசை திருப்புவதற்காக தி.மு.க., செய்யும் வேலை இது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., மற்றும் மா.கம்யூ., புகார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனு:நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற மூன்று பேரிடம் இருந்து, 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட இருவர், புரசைவாக்கத்தில் உள்ள திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் மேலாளராக பணிபுரிகின்றனர். திருநெல்வேலி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நயினார் நாகேந்திரன் பல்வேறு இடங்களில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம்.பா.ஜ., தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும். அதேபோல, தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களுக்கு சொந்தமான பகுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன், தலைமை தேர்தல் கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தை, அக்கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், செல்வா ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்தனர்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக, அவரது உறவினர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக எடுத்து சென்ற 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனத்து இடங்களிலும், அவரது உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும். அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், பண முறைகேடுகள் நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.