மேலும் செய்திகள்
முதல்வர் இன்று கோவை பயணம்
15 minutes ago
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 200 சொகுசு பஸ்கள்
40 minutes ago
சென்னை: 'லைக்கா' நிறுவனத்துக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாய் கடனை, 30 சதவீத வட்டியுடன் செலுத்தும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சினிமா பைனான்சியர் அன்பு செழியனின், 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம், 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. இத்தொகையை லைக்கா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, அனைத்து படங்களின் உரிமையையும் தருவதாக விஷால் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதால், கடனுக்காக செலுத்திய தொகையை திருப்பி தர, விஷாலுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைக்கா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய, 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் வழங்கும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செ ய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யலாமே' என, விஷால் தரப்பிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற் கு பதில் அளித்த விஷால் தரப்பு, '15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு, 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம். வட்டித்தொகை மட்டுமே, 40 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. லைக்கா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக் காரர் இல்லை' என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், 'அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா' என்று, கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம்; இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனக்கூறி, லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற, தனி நீதிபதியின் உத்தரவுக் கு, இடைக்கால தடை விதித்தனர். மேலும், 10 கோடி ரூபாயை டிபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டு, மனுவுக்கு லைக்கா நிறுவனம் பதில் அளிக்கக்கூறி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
15 minutes ago
40 minutes ago