சென்னை : ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாடே விழாக்கோலம் பூண்ட நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில், கும்பாபிஷேக நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய போலீசார் தடை விதித்ததும், சில கோவில்களில் சிறப்பு பூஜைக்கு அனுமதி அளிக்காததும், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பை காண, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ராமர் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. தனியார் நடத்தும் கோவில்களில், நிகழ்ச்சி நடத்தவும், போலீசார் தடை விதித்துள்ளனர்; பந்தல்களை பிரித்துள்ளனர். நிகழ்ச்சி நடத்துவோர் மிரட்டப்பட்டுள்ளனர். தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்.இதயத்தை நொறுங்க செய்யும் நிகழ்வுகள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. பஜனை, அன்னதானம், இனிப்பு வழங்குதல் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்தவர்கள் மிரட்டப்படுகின்றனர். பிரதமர் மோடி பங்கேற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரத்தில், நேரடி ஒளிபரப்பை தடை செய்ய, மின்தடை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.இது, இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க.,வின் ஹிந்து விரோத நடவடிக்கை. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, தமிழக அரசு நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. இது தவறான மற்றும் போலியான கதை. தமிழக பா.ஜ. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: திண்டுக்கல் மாவட்டம், ஏ வெள்ளோடு கிராமத்தில், ஸ்ரீபகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், ஸ்ரீராமர் கோவில் விழாவையொட்டி, அன்னதானம் வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ''அதிக கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர். கிறிஸ்துவ தேவாலயங்கள் அமைந்து உள்ளன. குறைந்த அளவிலேயே ஹிந்துக்கள் உள்ளதால், மேற்படி நிகழ்ச்சி நடத்தும்பட்சத்தில், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்.''பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு, அதன் வழியே சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனுமதி மறுக்கப்படுகிறது” என்று அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.ஏதாவது ஒரு காரணம் கூறி அனுமதி மறுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படி, மனம் போன போக்கில் இப்படி செயல்படுகின்றனர்.”தமிழகத்தில் அதிக ஹிந்துக்கள் வசிக்கின்றனர்; அதிக கோவில்கள் அமைந்துள்ளன. குறைந்த அளவிலே கிறிஸ்துவர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் சார்ந்த நிகழ்ச்சி நடக்கும்பட்சத்தில், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால், இனி தமிழகத்தில் கிறிஸ்துவ மக்கள் எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை” என காவல்துறை சொல்லுமா? நிர்வாக சீர்கேட்டின் உச்சத்தில் தமிழக அரசு நின்று கொண்டிருக்கிறது என்பதற்கு, இதை விட சான்று வேண்டுமா.* தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: நவ திருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரை திவ்யதேசத்தில், இன்று ராமர் பஜனை மற்றும் பூஜை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு, மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு. அதை தமிழக காவல்துறை மீறுகிறது. சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை. அதை காரணம் காட்டி, மக்களை கூட விடாமல் தடுப்பது, காவல் துறையின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.